தர்பூசணியா; பிலால் பிரியாணியா: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி திடீர் இடமாற்றத்திற்கு காரணம் என்ன?
தர்பூசணியா; பிலால் பிரியாணியா: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி திடீர் இடமாற்றத்திற்கு காரணம் என்ன?
ADDED : ஏப் 05, 2025 10:25 AM

சென்னை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தர்பூசணி பழங்களின் விற்பனை களை கட்டி உள்ளது. வெயில் கடுமை காரணமாக, பலரும் தர்பூசணியை வாங்கி சென்று சாப்பிட ஆரம்பித்தனர். வியாபாரமும் களைகட்டியதாக வணிகர்கள் தெரிவித்து இருந்தனர்.
அதேநேரத்தில் தர்பூசணி விற்கப்படும் கடைகளில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவற்றில் ரசாயனம் கலக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்ததால் அகற்றியதாக கூறினர். ரசாயனம் கலக்கப்பட்ட தர்பூசணி, நிறமேற்றி விற்பனைக்கு வைக்கப்பட்ட தர்பூசணி என மத்தியில் தகவல்கள் பரவியதால் அதை வாங்க மக்கள் தயக்கம் காட்டினர்.
வியாபாரிகள் தரப்பில் கடும் எதிர்ப்பும் எழுந்தது. பின்னர் இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் விளக்கம் அளித்திருந்தார். அதேசமயம் சென்னையில் பிரபலமான பிலால் ஹோட்டலில் ஆய்வு செய்ய அரசு வாகனத்தில் சென்றிருக்கிறார். ஹோட்டல் வாசலுக்குச் சென்ற அவர், பின்னர் சோதனை நடத்தாமல் சென்றுவிட்டார்.
இந் நிலையில், அதிகாரி சதீஷ்குமார் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் தமிழ்நாடு மருந்து நிர்வாகத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி போஸ், கூடுதலாக சென்னை மாவட்ட பொறுப்புகளை கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

