ரூ.100 கோடி செலுத்தாவிட்டால் தேவநாதன் கைது செய்யப்படுவார்; சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை
ரூ.100 கோடி செலுத்தாவிட்டால் தேவநாதன் கைது செய்யப்படுவார்; சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை
ADDED : நவ 11, 2025 04:47 AM

சென்னை: 'உயர் நீதிமன்ற நிபந்தனையின்படி, 100 கோடி ரூபாயை செலுத்தாவிட்டால், தேவநாதனை போலீசார் கைது செய்வர்' என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த, 'தி மயிலாப்பூர் இந்து பெர்மனட் பண்ட்' நிதி நிறுவன முதலீட்டாளர்களிடம், பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட நிதி நிறுவனத்தின் இயக்குநர் தேவநாதன் உள்ளிட்டோர் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயசந்திரன், அக்., 30ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். மேலும், '100 கோடி ரூபாயை விசாரணை நீதிமன்றத்தில், வைப்புத் தொகையாகச் செலுத்த வேண்டும்' என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
இந்த வழக்கு, நீதிபதி கே.ராஜசேகர் முன் விசாரணைக்கு வந்தபோது, தேவநாதன் சரணடைய, மேலும் ஒரு வாரம் அவகாசம் வழங்கிய நீதிபதி, ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன் முன் வழக்கை பட்டியலிட உத்தரவிட்டார்.
அதன்படி, நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன், முதலீட்டாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.திருமூர்த்தி, ''நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தின்படி, தேவநாதன் 100 கோடி ரூபாய் செலுத்தவில்லை; சரணடையவில்லை,'' என முறையிட்டார். ஒரு வார கால அவகாசம் வழங்கியும், அந்த உத்தரவும் நிறைவேற்றப்படாததை சுட்டிக்காட்டினார்.
இதை விசாரித்த நீதிபதி, 'நிபந்தனை நிறைவேற்றப்படாவிட்டால், அவரை போலீசார் கைது செய்வர்' என்றார்.

