பயப்பட வேண்டாம் மக்களே... 50 சதவீதம் மட்டும்தான்; நீர்வளத்துறை வெளியிட்ட தகவல்
பயப்பட வேண்டாம் மக்களே... 50 சதவீதம் மட்டும்தான்; நீர்வளத்துறை வெளியிட்ட தகவல்
ADDED : நவ 30, 2024 08:40 PM

சென்னை; சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், குடிநீர் ஆதாரமாக விளங்கும் நீர்நிலைகளின் விபரம் குறித்து நீர்வளத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
பெஞ்சல் புயல் இன்று மாலை முதல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடந்து வருகிறது. மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் கரையை கடக்கிறது. இதனால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது.
தொடர்ந்து, பெய்து வரும் கனமழையினால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் வெள்ளம் தேங்கி நிற்கின்றன. அதேபோல, சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக, அடையாறு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனிடையே, சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி உள்ளிட்ட அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர்வரத்து குறித்து நீர்வளத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தற்போது, வரையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 நீர்த்தேக்கங்கள் 50 சதவீதம் மட்டுமே நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பாக நீர்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; வங்கக்கடலில் உருவாகியுள்ள பெஞ்சல் புயலின் காரணமாக, இன்று காலை முதல் பெய்து வரும் மழையினால் செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்த்தேக்க உயரமான 24 அடியில் தற்பொழுது மாலை 4 மணி நிலவரப்படி 19.31 அடி உயரம் நிரம்பி, அதன் முழு கொள்ளனவான 3645 எம்.சி.எப்.டி.,யில் தற்பொழுது 67% ஆன 2436 எம்.சி.எப்.டி., நிரம்பியுள்ளது.
தொடர்ந்து நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. மேலும், 5 நீர்த்தேக்கங்களிலிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்கும் மொத்த கொள்ளளவான 11,76 டி.எம்.சி.,யில் தற்போது வரை சுமார் 50% கொள்ளளவு மட்டுமே நிரம்பியுள்ளது. நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஏரிகளின் நீர் விபரம் குறித்த அரசின் இந்த அறிவிப்பு மக்களை நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.

