ADDED : ஆக 05, 2025 11:16 PM
சென்னை:'சென்னை வழக்கறிஞர் முருகானந்தம் கொலை வழக்கை, ஜ.ஜி., மேற்பார்வையில், தாராபுரம் போலீசார், மூன்று மாதங்களுக்குள் விசாரித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்' என, சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளியான சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் முருகானந்தம், திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், கடந்த மாதம் 28ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வழக்கின் விசாரணையை, சி.பி.ஐ.,க்கு மாற்றக் கோரி, முருகானந்தத்தின் தாயார் சுமித்ரா தேவி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தார்.
மனுவில், 'தன் சித்தப்பா தண்டபாணி நடத்தி வரும், பள்ளி நிலம் தொடர்பாக, மகன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அதை அளவிட உத்தரவிட்டது. அதன்படி, நில அளவை அதிகாரி, கடந்த ஜூலை 28ல் நிலத்தை அளவிடப் போவதாகவும், அதற்கு நேரில் வருமாறும் முருகானந்தத்தை அழைத்தார்.
'சம்பவ இடத்துக்கு சென்றபோது, தண்டபாணியால் ஏற்பாடு செய்யப்பட்ட கூலிப்படை முருகானந்தத்தை வெட்டியது. அதிகாரிகள் கூட்டுச்சதியுடன் இந்த கொலை நடந்துள்ளது. எனவே, உள்ளூர் போலீசார் விசாரித்தால் சரியாக இருக்காது. சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணகுமார் ஆஜரானார்.
இதையடுத்து, 'முருகானந்தம் கொலை வழக்கை, போலீஸ் ஐ.ஜி., மேற்பார்வையில் விசாரித்து, மூன்று மாதங்களுக்குள் குற்றப்பத்திரிக்கையை, தாராபுரம் போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்ட நீதிபதி, முருகானந்தத்தின் உடலை பெற்றுக் கொள்ள, அவரது தாயாருக்கு அறிவுறுத்தும்படி, மனுதாரர் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.