ADDED : பிப் 25, 2026 04:12 AM

சென்னை: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து, அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ள, ஐ.நா., அமைப்பு சார்பில், சர்வதேச ஏ.ஐ., அறிவியல் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது; இது, ஏ.ஐ., தொழில் நுட்பத்திற்கான, உலகின் முதல் சர்வதேச அறிவியல் அமைப்பாகும். பல்வேறு நாடுகள் மற்றும் துறைகளைச் சேர்ந்த, சிறந்த வல்லுநர்களை ஒருங்கிணைத்து, ஆய்வு செய்வது இதன் இலக்காகும்.
உலகம் முழுதும், ஏ.ஐ., துறையில் சிறந்து விளங்கும், 40 வல்லுநர்களை ஐ.நா., அமைப்பு தேர்வு செய்து, குழுவில் நியமித்து உள்ளது. சென்னை ஐ.ஐ.டி.,யை சேர்ந்த பேராசிரியர் பி.ரவீந்திரன், இந்த குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவர் சென்னை ஐ.ஐ.டி.,யின், ஏ.ஐ., மையமான 'சீராய்' அமைப்பின் தலைவராகவும், வாத் வானி தரவு அறிவியல் மற்றும் ஏ.ஐ., பள்ளியின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

