சென்னையில் இடியுடன் கூடிய கனமழை; சாலைகளில் அணிவகுத்த வாகனங்கள்: விமானங்கள் தாமதம்
சென்னையில் இடியுடன் கூடிய கனமழை; சாலைகளில் அணிவகுத்த வாகனங்கள்: விமானங்கள் தாமதம்
ADDED : மே 23, 2025 10:12 PM

சென்னை; தலைநகர் சென்னையில் பல்வேறு இடங்களில் கொட்டிய கனமழையால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் அடுத்த சில நாட்களில் தொடங்குகிறது. அதே நேரத்தில் மே 27ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, மாவட்டத்தில் மே 25, 26 தேதிகளில்ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதே நாட்களில் தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்காக ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந் நிலையில் சென்னையில் நகர் மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. தாம்பரம், மீனம்பாக்கம், ஆலந்தூர், கிண்டி, பரங்கிமலை, ஆதம்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர், பெருங்களத்தூர், வண்டலூர், முடிச்சூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை கொட்டியது.
கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழையால் சாலைகளில் வாகன நெருக்கடி ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மழை எதிரொலியாக பல்வேறு நகரங்களில் சென்னை வரவேண்டிய விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடில் தாமதம் நிலவியது.