வாயுக்கசிவு, பள்ளிக்கு 3 நாள் லீவு! காரணம் கண்டுபிடிக்க புது ரூட்டில் ஆராயும் மாசு கட்டுப்பாட்டு வாரியம்
வாயுக்கசிவு, பள்ளிக்கு 3 நாள் லீவு! காரணம் கண்டுபிடிக்க புது ரூட்டில் ஆராயும் மாசு கட்டுப்பாட்டு வாரியம்
ADDED : நவ 05, 2024 03:21 PM

சென்னை: சென்னையில் தனியார் பள்ளியில் வாயுக்கசிவு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து மேலும் 3 நாட்கள் ஆய்வை தொடர மாசு கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.
திருவொற்றியூரில் உள்ள விக்டரி தனியார் பள்ளி ஒன்றில் அக்.26ம் தேதி ஆய்வுக் கூடத்தில் இருந்து ரசாயன வாயு கசிந்ததால் ஏராளமான மாணவிகள் மயங்கி விழுந்தனர். சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் வீடு திரும்பிவிட, 1 வாரம் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு செய்தனர். அப்போது ஆகஸ்ட் மாதம் செயல்முறை வகுப்புகளுக்கு பின்னர் வேதியியல் ஆய்வகத்தில் ரசாயன பாட்டில்கள் சுத்தம் செய்யாதது தெரியவந்தது. ஆனால் வாயுக்கசிவு எதனால் ஏற்பட்டது என அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னர் தீபாவளி விடுமுறை முடிந்து நேற்று(நவ.4) பள்ளி திறக்கப்பட்ட போது, மாணவிகள் சிலர் மயக்கம் அடைய பெரும் பரபரப்பு நிலவியது. பள்ளிக்கு விடுமுறை விடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந் நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளியில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் இன்று(நவ.5) ஆய்வு நடத்தினர். நவீன கருவிகளை பயன்படுத்தி காற்றில் ஏதேனும் நச்சுத்தன்மை கொண்ட வாயு இருக்கிறதா, காற்றின் தரம் எப்படி என ஆய்வு நடத்தினர். ஆனால் ஆய்வில் எந்த காரணமும் கண்டறியப்படவில்லை.
இதுதொடர்பாக சுற்றுச்சூழல் துறை செயலாளருக்கு தாக்கல் செய்யப்பட்ட முதல்கட்ட அறிக்கையில் வாயுக்கசிவுக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. காற்றில் அமோனியா வாயு அதிகம் இல்லை என்று குறிப்பிடப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
எனவே, பள்ளியில் தொடர்ச்சியாக 3 நாட்கள் ஆய்வை நடத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. காற்றின் தரத்தை பரிசோதிக்கும் வாகனத்தை பள்ளியில் நிறுத்தி 3 நாட்கள் ஆய்வு நடத்த அதன் பின்னர் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

