ADDED : பிப் 26, 2024 12:17 AM
பெரம்பலுார் : சென்னை, அம்பத்துாரைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவன் சந்தானகிருஷ்ணன், 17, அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவன் பச்சையப்பன், 18, பி.இ., முதலாமாண்டு மாணவன் தஞ்சாவூர், திருவள்ளுவர் நகரை சேர்ந்த தீபக், 21, ஆகிய மூவரும் நண்பர்கள்.
மாசிமக திருவிழாவை முன்னிட்டு சக நண்பரான, தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அம்மாள் கிராமத்தில் உள்ள சந்தோஷ் வீட்டுக்கு இரண்டு நாட்களுக்கு முன் மூவரும் வந்தனர்.
நேற்று மதியம், 1:30 மணியளவில் சந்தானகிருஷ்ணன், பச்சையப்பன், தீபக் உட்பட ஒன்பது பேர் அரியலுார் மாவட்டம், திருமானுார் சோதனை சாவடி அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றனர்.
அனைவரும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, சந்தானகிருஷ்ணன், பச்சையப்பன், தீபக் திடீரென நீரில் அடித்து செல்லப்பட்டனர். மற்ற ஆறு பேரும் கரை திரும்பினர்.
அரியலுார் தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி மாணவர்களை தேடினர். சந்தானகிருஷ்ணன், பச்சையப்பன் உடல்கள் மீட்கப்பட்டு, அரியலுார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைக்கப்பட்டது.
இதில், நீரில் அடித்து செல்லப்பட்ட தீபக்கை தேடும் பணி இன்றும் தொடரும் என, திருமானுார் போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே தீபக்கின் உடலை விரைந்து மீட்கும்படி அவரது உறவினர்கள் நேற்று மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
