சிறு தொழில்களுக்கான 'உத்யம்' பதிவில் சென்னை முதலிடம்; மயிலாடுதுறை கடைசி
சிறு தொழில்களுக்கான 'உத்யம்' பதிவில் சென்னை முதலிடம்; மயிலாடுதுறை கடைசி
ADDED : ஏப் 20, 2025 01:00 AM
சென்னை:தமிழகத்தில், 'உத்யம்' இணையதளத்தில் பதிவு செய்துள்ள,சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கை யில், சென்னை, 3.75 லட்சத் துடன் முதலிடத்தில் உள்ளது. முதல், 10 இடங் களில், தென் மாவட்டங் களில் மதுரை மட்டுமே இடம்பெற்று உள்ளது.
நாடு முழுதும் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், உதிரிபாகங்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் போன்றவற்றை உற்பத்தி செய்கின்றன. இந்நிறுவனங்கள், அரசின் அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவதால், வங்கி கடன், மானிய சலுகை கிடைக்க சிரமப்படுகின்றன.
எனவே, அந்நிறுவனங்களை முறைப்படுத்த, 'உத்யம்' இணையதள பதிவை, மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. அனைத்து நிறுவனங்களும், 'உத்யம்' இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதில், பதிவுசெய்த நிறுவனங்களுக்கு, மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்களில், முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கடந்த மார்ச் வரை தமிழகத்தில், 33.62 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், 'உத்யம்' தளத்தில் பதிவு செய்துள்ளன.
அதில், 33 லட்சம் குறுந்தொழில்கள், 56,853 சிறு தொழில்கள், 5,108 நடுத்தர நிறுவனங்கள். உத்யம் பதிவு பெற்ற சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில், 3.75 லட்சம் நிறுவனங்களுடன் சென்னை முதலிடத்தில் உள்ளது.
தொடர்ந்து கோவை, 2.58 லட்சம்; சேலம் 1.77 லட்சம்; திருப்பூர், 1.67 லட்சம்; மதுரை, 1.47 லட்சம் என முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளன.
திருவள்ளூர் 1.40 லட்சம் நிறுவனங்களுடன் ஆறு; ஈரோடு, 1.14 லட்சம் - ஏழு; காஞ்சிபுரம், 1.09 லட்சம் - எட்டு; திருச்சி, 1.08 லட்சம் - ஒன்பது; கிருஷ்ணகிரி, 99,211 நிறுவனங்களுடன் பத்தாம் இடத்தில் உள்ளன.
முதல் 10 இடங்களில் தென் மாவட்டங்களில், மதுரை மட்டுமே இடம் பெறுகிறது. தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மயிலாடுதுறை மாவட்டம், 26,897 நிறுவனங்களுடன், பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.