அதிமுக - பாஜ கூட்டணியை பார்த்து முதல்வருக்கு பயம்: இபிஎஸ்
அதிமுக - பாஜ கூட்டணியை பார்த்து முதல்வருக்கு பயம்: இபிஎஸ்
ADDED : ஜூலை 24, 2025 07:03 PM

புதுக்கோட்டை: '' அதிமுக -பாஜ கூட்டணி அமைத்ததை பார்த்து முதல்வர் ஸ்டாலினுக்கு ஜூரம் வந்துவிட்டது. பயத்தில் உள்ளார், '' என எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் பேசினார்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் ' மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' பயணத்தில் இபிஎஸ் பேசியதாவது: தேர்தலுக்கு முன்பு அளித்த பல வாக்குறுதிகளை தி.மு.க., நிறைவேற்றவில்லை. பாஜ உடன் இபிஎஸ் எப்படி கூட்டணி வைக்கலாம் என திமுகவினர் கேட்கின்றனர். அதிமுக நமது கட்சி. யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கலாம். இவர்களுக்கு ஏன் கசக்கிறது. ஏன் எரிச்சல் படுகின்றனர்.
அதிமுக -பாஜ கூட்டணி வைத்த அன்றே ஸ்டாலினுக்கு ஜூரம் வந்துவிட்டது. பயம். 2026 தேர்தலில் அதிமுக பாஜ கூட்டணி வெற்றி பெறும். 1999 ல் பாஜவுடன் திமுக கூட்டணி வைத்தது. அப்போது பாஜ என்ன கட்சி. நாடகம் போடுகின்றனர். மக்களை திசைதிருப்ப ஏதேதோ பேசி மிகப்பெரிய நாடகத்தை அரங்கேற்றுகின்றனர். ஸ்டாலின் எவ்வளவு அவதாரம் எடுத்து நாடகத்தை அரங்கேற்றினாலும், மக்கள் நம்பப்போவது இல்லை. சட்டசபை தேர்தலில் அதிமுக வரலாற்று ரீதியிலான வெற்றி பெறும்.நாங்கள் கடை வைத்து வியாபாரம் ஆகவில்லை எனச் சொல்கின்றனர். அதிமுக ஐஎஸ்ஐ முத்திரை போன்றது. மக்கள் செல்வாக்கு மிக்க கட்சி. உங்களைப்போன்று வீடு வீடாக சென்று கதவை தட்டி திமுகவில் உறுப்பினராக சேருங்கள் என்று கெஞ்சுகின்ற கட்சி அல்ல. வீடு வீடாக சென்று பிச்சை எடுத்த கட்சி ஏதும் உள்ளதா? திமுக தான் பிச்சை எடுக்கிறது. நம்மைப் பற்றி பேச அவர்களுக்கு என்ன தகுதி உள்ளது.
மக்களை ஏமாற்ற ஓரணியில் தமிழ்நாடு என பெயர்வைத்துள்ளனர். மக்கள் உஷாராக இருக்க வேண்டும். திமுகவினர் வந்து மொபைல் எண் கேட்டால் கொடுக்க வேண்டாம். அவர்கள் ஓட்டுக் கேட்க வரவில்லை. உங்கள் வீட்டில் என்ன இருக்கிறது என தெரிந்து கொள்ள மொபைல் எண் கேட்கின்றனர்.
டாஸ்மாக்கில் கொள்ளையடிக்கின்றனர். அதன் மூலம் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர். திமுக கார்ப்பரேட் கம்பெனி போல் உள்ளது. ஸ்டாலின் சேர்மன் ஆக உள்ளார். குடும்ப உறுப்பினர்கள் இயக்குநர்களாக உள்ளனர். உதயநிதிக்கு என்ன தகுதி உள்ளது? கருணாநிதி பேரன், ஸ்டாலின் மகன் என்பதை வைத்து ஆட்சி செய்ய நினைக்கின்றனர்.தமிழகத்தை இவர்கள் மட்டுமா ஆட்சி செய்ய வேண்டும். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.