நாய்களை கட்டுப்படுத்த முதல்வர் ஆய்வு அமைச்சர் மா.சு., பெருமிதம்
நாய்களை கட்டுப்படுத்த முதல்வர் ஆய்வு அமைச்சர் மா.சு., பெருமிதம்
ADDED : ஜூலை 12, 2025 12:15 AM
சென்னை:சென்னை, டி.எம்.எஸ்., வளாகத்தில், உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணியை, துவக்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
இந்தாண்டுக்கான மக்கள் தொகை தினத்தை யொட்டி, 'ஆரோக்கியமான போதிய இடைவெளியுடன் பிள்ளை பேறு; திட்டமிட்ட பெற்றோருக்கான அடையாளம்' என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, பேறுகால பெண் மரண விகிதம், ஒரு லட்சம் பிரசவங்களில், 39 ஆக குறைந்துள்ளது.
அதேபோல், 1,000 குழந்தைகளில் ஏழு என குழந்தை இறப்பு உள்ளது. இதையும் படிப்படியாக அரசு குறைத்து வருகிறது. இதற்காக, இளம் வயது திருமணத்தை தவிர்ப்பது போன்ற பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன.
வெறி நாய் கடியால் ஏற்படும் ரேபிஸ் பாதிப்பு தமிழகத்தில் பெரியஅளவில் இல்லை. உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், அந்நோயை கட்டுப்படுத்தும் பணி தொடர்ந்து வருகிறது.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், வெறி நாய்களை கட்டுப்படுத்தவும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும், முதல்வர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இது போன்று, வேறு எந்த மாநிலங்களிலும் நடந்தது இல்லை. மேலும், நாய்க்கடி, பாம்புக்கடிக்கான அனைத்து தடுப்பு மருந்துகள் போதியளவில் கையிருப்பில் உள்ளன. கேரளாவில், 'நிபா வைரஸ்' பரவி வருவதால், அங்கிருந்து வருபவர்கள், உரிய விதிகளின்படி கண்கா ணிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.