'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' நுாலை வெளியிடுகிறார் முதல்வர்
'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' நுாலை வெளியிடுகிறார் முதல்வர்
ADDED : ஜூலை 10, 2025 12:13 AM
சென்னை:கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள, 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' நுாலை, வரும் 13ல், முதல்வர் ஸ்டாலின் வெளியிட உள்ளார்.
திருக்குறளுக்கு, 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற தலைப்பில், வைரமுத்து உரை எழுதி நுாலாக்கி உள்ளார்.
இதை சென்னை, காமராஜர் அரங்கத்தில், வரும் 13ம் தேதி மாலை 6:00 மணிக்கு, முதல்வர் ஸ்டாலின் வெளியிட, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற உள்ளார்.
முன்னாள் தலைமை செயலர் இறையன்பு, பேராசிரியர் பர்வீன் சுல்தானா ஆகியோர் வாழ்த்துரையும், வைரமுத்து ஏற்புரையும் நிகழ்த்த உள்ளனர்.
இதுகுறித்து, வைரமுத்து வெளியிட்டுஉள்ள அறிக்கை:
திருக்குறளுக்கு காலந்தோறும் உரை எழுதப்பட்டு வந்துள்ளது. உரை ஆசிரியர்கள், தாம் கற்ற கல்வி, சார்ந்த கொள்கை, சமூகச் சூழலுக்கு ஏற்ப உரைகளை எழுதி உள்ளனர். அவற்றில் இருந்து என் உரை மாறுபட்டது.
அறவியலுக்காக எழுதப்பட்ட திருக்குறளுக்கு, அறிவியலின்படி உரை எழுதி இருக்கிறேன். இது எளிமையும், துல்லியமும் உடையது. 'டிஜிட்டல்' தலைமுறைக்கு ஏற்ப, மின்னல் மொழியில் எழுதப்பட்டுள்ளது. ஆனாலும், பண்டிதரையும் பாமரரையும் ஒருசேர சென்றடையும்.
இதில், அறத்துப்பாலும், பொருட்பாலும் ஞானத் தமிழிலும், இன்பத்துப்பால் கவிதை மொழியிலும் எழுதப்பட்டுள்ளது.
இது, இலகுவான மொழியில், கவிதை கொஞ்சும் நடைமுறைத் தமிழில் எழுதப்பட்டுள்ளதால், அனைவராலும் படிக்க இயலும். 12 வயதில் நான் கண்ட கனவு, என் 72 வயதில் நனவாகி உள்ளது. இது, ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும், இல்லத்திலும் இருக்க வேண்டும் என்பதுதான் என் குறிக்கோள்.
இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.