அரசியல், பொருளாதார, சமூக ரீதியாக தமிழகத்தின் மீது பா.ஜ., படையெடுப்பு முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
அரசியல், பொருளாதார, சமூக ரீதியாக தமிழகத்தின் மீது பா.ஜ., படையெடுப்பு முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
ADDED : ஜன 26, 2025 03:18 AM

சென்னை: ''தமிழகத்தின் மீது, அரசியல், பொருளாதார, சமூக பண்பாட்டு படையெடுப்பை, மத்திய பா.ஜ., அரசு நடத்துகிறது,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சென்னை பல்லாவரத்தில், தி.மு.க., சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.
போராடியுள்ளோம்
அதில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
பல்வேறு காலகட்டங்களில் ஹிந்தியை எதிர்த்து போராடியுள்ளோம். தற்போதும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், ஹிந்தியை திணிக்கலாமா, சமஸ்கிருதத்தை திணிக்கலாமா என, மத்திய ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர்; மும்மொழி திட்டத்தை கொண்டு வர பார்க்கின்றனர்.
தேசிய கல்வி கொள்கை வாயிலாக, ஹிந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க பார்க்கின்றனர்.
தேசியளவில் தமிழகம், இரண்டாவது பொருளாதார மாநிலமாக உள்ளது. தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நம் பங்கு, 5.4 சதவீதமாக இருந்தது. கடந்த நான்கு ஆண்டுகளில், 9.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. பொருளாதார குறியீட்டிலும் வளர்ச்சி அடைந்துள்ளோம். மருத்துவம், கல்வி, விளையாட்டில் வளர்ச்சி அடைந்துள்ளோம்.
தமிழக மக்கள் தொகையில், 2.2 சதவீதம் மட்டுமே ஏழைகளாக உள்ளனர். வரும் இரண்டு ஆண்டுகளில், ஏழைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும். தமிழக அமைதியான மாநிலம். அதனால் தான், அதிகளவிலான பெண்கள் வேலைக்கு செல்கின்றனர்.
தேசிய அளவில், 41 சதவீதம் பெண் பணியாளர்கள் தமிழகத்தில் உள்ளனர். மேலும், 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான தனியார் தொழில் முதலீட்டை பெற்றுள்ளோம்.
இந்த வளர்ச்சியை பல்வேறு ஆதிக்க சக்திகள் விரும்பவில்லை; சிதைக்க முயற்சிக்கின்றனர். தமிழகத்தின் மீது, அரசியல், பொருளாதார, சமூக பண்பாட்டு படையெடுப்பை, மத்திய பா.ஜ., அரசு நடத்துகிறது.
மொழிப்போர் இன்றும் தொடர்கிறது. பொதிகை தொலைக்காட்சியில் ஹிந்தி மாதம் கொண்டாடப்படுகிறது. நம் எம்.பி.,க்கள் அனுப்பும் கடிதங்களுக்கு, ஹிந்தியில் பதில் அளிக்கப்படுகிறது. மொழி அழிந்தால், அடையாளம், இனமும் அழிந்து விடும்.
எனவே, மொழி, இனம், நாட்டையும் காக்க வேண்டும். அன்று, மாணவர்களும், இளைஞர்களும் இணைந்து, தமிழை காத்தனர். பல்கலைகளில் மாநில உரிமையை பறிக்கும் மத்திய அரசுக்கு எதிராக, டில்லியில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும். இது, கல்வி உரிமை போர்; மொழி போர்.
வெற்றி தொடரும்
வரும் 2026 சட்டசபை தேர்தல், கொள்கைவாதிகளான நமக்கும், கொத்தடிமையான அ.தி.மு.க.,வுக்குமான தேர்தல். தமிழகத்தை அடமானம் வைத்த அ.தி.மு.க.,வுக்கும், முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும் தி.மு.க.,வுக்குமான தேர்தல்.
கருணாநிதி மறைவுக்கு பின், அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று, அவருக்கு பெருமை சேர்த்துள்ளோம். 2026 தேர்தலிலும் நாம் தான் வெல்வோம்; வெற்றி தொடரும்.
இவ்வாறு அவர் பேசினார்.

