மாய உலகில் முதல்வர் ஸ்டாலின் அன்புமணி குற்றச்சாட்டு
மாய உலகில் முதல்வர் ஸ்டாலின் அன்புமணி குற்றச்சாட்டு
ADDED : ஜன 01, 2025 06:56 PM
சென்னை:'தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஒடுகிறது என்ற பொய்யை தவிர, வேறு எதையும் கேட்க விரும்பாத, மாய உலகில் முதல்வர் ஸ்டாலின் சஞ்சரிக்கிறார்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் திம்மாவரம் கிராமத்தில், இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஏழு நாட்களுக்கு மேலாகியும், குற்றவாளிகளை கைது செய்ய, தமிழக அரசும், காவல் துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு, இந்த சம்பவமே உதாரணம். இப்போது ஏராளமான புதிய தொழில்நுட்பங்கள் வந்த நிலையில், ஒரு கொடிய குற்றத்தை செய்தவர்களை, காவல் துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது நம்பும்படியாக இல்லை. குற்றவாளிகளை தப்ப வைக்க சதி நடக்கிறதோ, என்ற சந்தேகம் எழுகிறது.
இத்தகைய செய்திகளை அறிந்து கொள்ளக்கூட முதல்வர் விரும்புவதில்லை. ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் கலெக்டர்,  காவல்துறை அதிகாரிகள் மாநாட்டை, 2023 அக்டோபருக்கு பின் நடத்தவில்லை. தமிழகத்தில் தேனும், பாலும் ஆறாக ஓடுகின்றன; மக்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர் என்ற பொய்யை தவிர, வேறு எதையும் கேட்க விரும்பாத மாய உலகில் முதல்வர் ஸ்டாலின் சஞ்சரித்து கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட முதல்வரை பெற, தமிழகம் என்ன புண்ணியம் செய்ததோ தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

