தமிழ் நிலப்பரப்பில் தான் 'இரும்பு காலம்' துவங்கியது உலகிற்கு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ் நிலப்பரப்பில் தான் 'இரும்பு காலம்' துவங்கியது உலகிற்கு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ADDED : ஜன 24, 2025 01:10 AM

சென்னை:“தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் துவங்கியது என்ற மாபெரும் மானுடவியல் ஆய்வு பிரகடனத்தை அறிவிக்கிறேன்,” என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில், 'இரும்பின் தொன்மை' நுால் வெளியீடு, கீழடி திறந்தவெளி மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், கீழடி இணையதளம் துவக்கம் ஆகிய நிகழ்ச்சிகள், சென்னை கோட்டூர்புரம் அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் நேற்று நடந்தன.
பகுப்பாய்வு முடிவு
'இரும்பின் தொன்மை' நுாலை முதல்வர் வெளியிட, அமைச்சர் தங்கம் தென்னரசு பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போவதாக சொல்லி இருந்தேன். பலரும் என்ன அறிவிப்பு என்று கேட்டுக் கொண்டே இருந்தனர். தமிழர்களின் தொன்மையை உலகத்திற்கே சொல்லும், ஒரு மாபெரும் ஆய்வு பிரகடனத்தை அறிவிக்கிறேன்.
தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான், இரும்பின் காலம் துவங்கியது. இந்திய நாட்டுக்கு மட்டுமல்ல; உலகிற்கே சொல்கிறேன்... தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் துவங்கியது. கடந்த 5,300 ஆண்டுகளுக்கு முன், 'உருக்கு இரும்பு தொழில்நுட்பம்' தமிழ் நிலத்தில் அறிமுகமாகி விட்டது.
தற்போது தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கிடைக்கப் பெற்ற காலக் கணக்கீடுகள், இரும்பு அறிமுகமான காலத்தை, கி.மு., 4000ம் ஆண்டின் முற்பகுதிக்கு கொண்டு சென்றிருக்கிறது. தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன், இரும்பு அறிமுகம் ஆகியிருக்கிறது என உறுதியாக சொல்லலாம்.
தமிழக தொல்லியல் துறை நடத்திய அகழாய்வுகளில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள், மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இருக்கும் 'பீர்பால் சகானி' தொல் அறிவியல் நிறுவனம், குஜராத் மாநிலம் ஆமதாபாதில் இருக்கும் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் ஆகிய, தேசிய அளவில் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனங்களுக்கும், பன்னாட்டு அளவில் உயரிய நிறுவனமான, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருக்கும் 'பீட்டா' ஆய்வகத்துக்கும், பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
பாராட்டு
தேசிய நிறுவனங்களில் ஓ.எஸ்.எல்., எனும் பகுப்பாய்வுக்கும், பீட்டா ஆய்வகத்தில் கதிரியக்க கால பகுப்பாய்வுக்கும் ஒரே தாழியில் இருந்து மாதிரிகள் அனுப்பப்பட்டன.
மூன்று நிறுவனங்களிடம் இருந்தும், ஒரே மாதிரியான பகுப்பாய்வு முடிவு கள் பெறப்பட்டுள்ளன.
இப்போது கிடைத்திருக்கும் கதிரியக்க காலக் கணக்கீடுகள் மற்றும் ஓ.எஸ்.எல்., பகுப்பாய்வு காலக் கணக்கீடுகள் அடிப்படையில், தென் மாநிலங்களில் கி.மு., 3345லேயே இரும்பு அறிமுகமாகி விட்டது என்று தெரிய வருகிறது.
இந்த பகுப்பாய்வு முடிவுகள், வெளிநாடுகள் மற்றும் இந்தியாவில் இருக்கும் தொல்லியல் அறிஞர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவர்கள் தமிழக அரசையும், தொல்லியல் துறையின் ஆய்வு முன்னெடுப்புகளையும் பாராட்டி உள்ளனர்.
அனைத்தையும் தொகுத்து, 'இரும்பின் தொன்மை' நுால் வெளியிடப்பட்டிருக்கிறது. அகழாய்வு செய்யப்பட்ட இடங்களில் இருக்கும் இரும்பு பொருட்களின் உலோகவியல் பகுப்பாய்வும், இரும்பு தாது இருக்கும் தொல்லியல் தளங்களில், எதிர்காலத்தில் மேற்கொள்ள உள்ள அகழாய்வுகளும், இந்த கண்டுபிடிப்புகளுக்கு மேலும் வலு சேர்க்கும்.
சான்றுகளை வழங்கி தெளிவு பெற வைக்கும். அப்படியான வலுவான சான்றுகளுக்கு காத்திருப்போம்.
அண்மை கால அகழாய்வு முடிவுகள் வாயிலாக, உலக அளவில் இரும்பு தாதுவிலிருந்து இரும்பை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம், தமிழ் நிலப்பரப்பில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது என பெருமிதத்தோடு கூறுவோம்.
பெருமை
அதாவது, 5,300 ஆண்டுகளுக்கு முன், தமிழ் நிலப்பரப்பில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதை, அறிவியல் அடிப்படையில் நிறுவியிருக்கிறோம் என்பதை உலகுக்கு அறிவிக்கிறேன்.
இது, தமிழுக்கும், தமிழினத்துக்கும், தமிழகத்துக்கும், தமிழ் நிலத்துக்கும் பெருமை.
இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்பட வேண்டும். அதை மெய்ப்பிக்கும் ஆய்வுகளை, தமிழக தொல்லியல் துறை தொடர்ந்து செய்து வருகிறது.
தமிழகத்தில் நகர நாகரிகமும், எழுத்தறிவும் கி.மு., 6ம் நுாற்றாண்டே துவங்கி விட்டது என, கீழடி அகழாய்வு முடிவுகள் நிறுவியிருக்கின்றன. இதற்கு முன், தமிழகத்தில் இரும்பின் அறிமுகம், 4,200 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை, கிருஷ்ணகிரி மாவட்டம், மயிலாடும்பாறை அகழாய்வு வாயிலாக அறிவித்தோம்.
திருப்புமுனை
இத்தகைய அகழாய்வு முடிவுகள், தமிழக வரலாற்றுக்கு மட்டுமல்லாமல், இந்திய துணை கண்ட வரலாற்றுக்கே முக்கிய திருப்புமுனையாக திகழ்ந்து வருகிறது.
தமிழ், தமிழ் நிலம், தமிழகம் குறித்து நாம் இதுவரை சொல்லி வந்ததெல்லாம், இலக்கிய புனைவுகள் அல்ல; அரசியலுக்காக சொன்னவை அல்ல. எல்லாம் வரலாற்று ஆதாரங்கள் என மெய்ப்பிக்க வேண்டிய கடமையை, அரசு எடுத்து கொண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், வேலு, தலைமை செயலர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

