சென்னையில் ரூ.40 கோடியில் சிவில் சர்வீசஸ் பயிற்சி மையம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னையில் ரூ.40 கோடியில் சிவில் சர்வீசஸ் பயிற்சி மையம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ADDED : ஏப் 25, 2025 01:09 AM
சென்னை:''சென்னை ஷெனாய் நகரில், 40 கோடி ரூபாயில், சிவில் சர்வீசஸ் தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழக மாணவர்களின் திறனை வளர்க்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது தான், 'நான் முதல்வன்' திட்டம். அத்திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளால், அகில இந்திய சிவில் சர்வீசஸ் தேர்வு களில், தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
'நான் முதல்வன்' திட்டம்
கடந்த 2016 வரை சிவில் சர்வீசஸ் தேர்வுகளில், தமிழக மாணவர்கள் அதிகமாக தேர்ச்சி பெற்றனர்.
இந்நிலை மாறி, 2021ல் 27 மாணவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதை கவனத்தில் வைத்து, 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பல்வேறு முயற்சிகளை, இந்த அரசு மேற்கொண்டது.
சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகும், 1,000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மாதம், 7,500 ரூபாய் வீதம், 10 மாதங்களுக்கு வழங்கினோம்.
முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று, முதன்மை தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு, ரொக்கமாக, 25,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினோம்.
அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லுாரியின், அகில இந்திய சிவில் சர்வீசஸ் தேர்வு மையம் வாயிலாக, இந்த மாணவர்களுக்கு தேவையான பயிற்சிகள் அனைத்தும் வழங்கப்பட்டன.
தமிழக அரசு மேற்கொண்ட தீவிரமான முயற்சிகள் பயனாக, இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து, 57 மாணவர்கள் பல்வேறு அகில இந்திய பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களில் 50 பேர், 'நான் முதல்வன்' திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது.
'நான் முதல்வன்' திட்டத்தின் இந்த வெற்றியை தக்கவைக்க வேண்டும். அது மட்டுமல்லாது, தேர்வில் வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கையை மேலும் உயர்த்த வேண்டும்.
பாராட்டு விழா
அதற்காக, சென்னை ஷெனாய் நகரில், 40 கோடி ரூபாயில், 500 மாணவர்கள் தங்கி படிக்கும் வகையில், அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய பயிற்சி மையம் அமைக்கப்படும்.
இந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அவர்கள் பயிற்சி பெற்ற அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லுாரி வளாகத்தில், நாளை பாராட்டு விழா நடக்கவுள்ளது.
அதில் நான் கலந்து கொள்கிறேன். கடைக்கோடி தமிழ் இளைஞர்களின் கனவுகளையும் நனவாக்குவதே, இந்த தி.மு.க., அரசின் முழு முதற்கடமை.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

