சென்னையில் வள்ளலார் ஆய்வு மையம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னையில் வள்ளலார் ஆய்வு மையம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
UPDATED : பிப் 16, 2026 03:48 PM
ADDED : பிப் 16, 2026 01:29 AM

சென்னை: சென்னையில் வள்ளலார் ஆய்வு மையம் அமைக்கப்படும் என்பது உட்பட, எட்டு அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
ஹிந்து சமய அற நிலையத்துறை சார்பில், 'அனைத்துலக வள்ளலார் மாநாடு - 2026' சென்னை கீழ்ப்பாக்கத்தில் நேற்று நடந்தது. மாநாட்டு திடலில், வள்ளலார் புகைப்பட கண்காட்சி மற்றும் மூலிகை கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
பின், சன்மார்க்கர்களுக்கு விருதுகள் வழங்கி, அவர் பேசியதாவது:
ஹிந்து சமய அறநிலைய துறையில், தி.மு.க., அரசு பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளது. 20 முதல் 100 ஆண்டுகள் வரை திருப்பணி நடக்காமல் இருந்த 4,192 கோவில்களில், திருப்பணி மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
மேலும், 12,931 கோவில்களில், 8,100 கோடி ரூபாய் மதிப்பில் 29,479 திருப்பணிகள் நடந்து வருகின்றன. கோவில்களுக்கு சொந்தமான 8,423 கோடி ரூபாய் மதிப்பிலான 8,106 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளன.
உலகிற்கு அன்பு வழியை போதித்தவர் வள்ளலார். அவர் வழியில், மக்கள்நலத் திட்டங்களை தி.மு.க., அரசு செயல்படுத்தி வருகிறது. இம்மாநாட்டின் வாயிலாக சில அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.
அனைத்துலக வள்ளலார் மாநாடு நடந்ததை குறிக்கும் வகையில், பள்ளி வளாகத்தில் நினைவுத்துாண் அமைக்கப்படும்
வடலுா ரில் சன்மார்க்க பயிற்சி பள்ளி ஏற்படுத்தப்படும். அந்த பள்ளியில், திருவருட்பா இசைப்பயிற்சி அளிக்கப்படும்
வடலுாரில், வள்ளலார் பெயரில் மூலிகை தோட்டம் அமைக்கப்படும்
ஸ்பிரி ச்சுவல் அல் - கெமி என்ற வள்ளலார் புத்தகம், அறநிலையத்துறை பதிப்பகம் வழியே வெளியிடப்படும்
வள்ளலார் பிறந்த நாளையொட்டி, ஆண்டுதோறும், மூன்று நாட்கள் விழா நடத்தப்படும்
மேட்டுக்குப்பம், மருதுார், கருங்குழி ஆகிய இடங்களில் வள்ளலார் அன்னதான கூடங்கள் திறக்கப்படும்
கடலுார் மாவட்டம் கலெக்டர் அலுவலகம் அருகில் அமைக்கப்படும் பூங்காவுக்கு, 'வள்ளலார் பூங்கா' என பெயர் சூட்டப்படும்
சென்னையில் உள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலக வளாகத்தில், வள்ளலார் ஆய்வு மையம் அமைக்கப்படும்.
மாநாட்டில் பேசியோர் முன்வைத்த கோரிக்கைகள் நிச்சயம் பரிசீலிக்கப் படும். வள்ளலாரின் நோக்கங்களை மக்கள் முழுமையாக உணர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அதற்கு இந்த மாநாடு வழிவகுக்கும். ஏனெனில், நம் பண்பாட்டு அடையாளங்களுக்கு வேறு வர்ணம் பூச நினைக்கின்றனர். வள்ளலாரின் நோக்கங்களை சிதைத்திட நாம் அனுமதிக்கக் கூடாது. பிரிவினை சக்திகளுக்கு, ஒருபோதும் இடம் கொடுக்காமல் அன்பும், பண்பும், அறனும், கருணையும் கொண்ட சமுதாயத்தை உருவாக்க உழைப்போம்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

