எதிர்க்கட்சி தலைவர்களுக்கு சிந்தனையில் குறைபாடு; முதல்வர் ஸ்டாலின் தாக்கு
எதிர்க்கட்சி தலைவர்களுக்கு சிந்தனையில் குறைபாடு; முதல்வர் ஸ்டாலின் தாக்கு
ADDED : ஜன 28, 2025 12:33 PM

விழுப்புரம்: 'சில எதிர்க்கட்சி தலைவர்கள் குறைகளை மட்டுமே சொல்லி கொண்டு இருக்கிறார்கள். அது ஆட்சியின் குறை அல்ல, அவர்கள் சிந்தனையில் ஏற்பட்டு இருக்கும் குறைபாடு' என முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
விழுப்புரத்தில் ரூ.133 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். பின்னர் அவர் ரூ. 425 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திராவிட இயக்கத்தின் தலைமகன்களில் ஒருவராக கோவிந்தசாமி இருந்துள்ளார். அவருக்கு மணி மண்டபம் அமைத்து, சிலையை திறந்து வைப்பது எனக்கு வாழ்நாள் பெருமை. உதய சூரியன் சின்னத்தில் முதலில் நின்று வென்றவர் கோவிந்தசாமி; மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 20% தனி இட ஒதுக்கீடு கொடுத்தவர் கருணாநிதி.
மணிமண்டபம்
இடஒதுக்கீட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 2 லட்சம் பேர் மீதான வழக்குகளை தி.மு.க., அரசு தான் திரும்பப் பெற்றது. பட்டியலின, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் பாதுகாவலாராக தி.மு.க., அரசு இருக்கிறது. 21 சமூக நீதிப் போராளிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை இன்று நிறைவேற்றியுள்ளேன். யாருக்கும் யாரும் அடிமை இல்லை. எல்லாருக்கும் எல்லாம். எந்த சூழ்நிலையிலும் சமரசம் இல்லாம் செயல்படுத்தி காட்டுவது தான் தி.மு.க., அரசு. என்னை முன்னிலைப்படுத்தி நான் ஏதும் செய்வதில்லை.
திராவிட மாடல்
தமிழகத்தை முன்னிலைப்படுத்தி தான் செயல்பட்டு கொண்டு இருக்கிறேன். இதனால் தி.மு.க., ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று சொல்கிறேன். இது ஸ்டாலின் ஆட்சி என்று தற்பெருமை தேடி கொள்ள விரும்பவில்லை. பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும் திராவிட மாடல் ஆட்சி என்று தான் நான் சொல்கிறேன். திராவிடம் தான் நமது தாய்நிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது. திராவிடமே நவீன தமிழகத்தை உருவாக்கியது. எதிரிகள் பல முனை தாக்கல் நடத்தி, சோர்வடைந்துள்ளனர்.
சிந்தனை குறைபாடு
நமக்கு நிதி ஒன்று தான் தடையாக இருக்கிறது. வேற எந்த தடையும் கிடையாது. நிதி இல்லை என்று புலம்பி கொண்டு இருக்காமல், மக்கள் குறைகளை நீக்கும் அரசாக தி.மு.க., இருக்கிறது. சில எதிர்க்கட்சி தலைவர்கள் குறைகளை மட்டுமே சொல்லி கொண்டு இருக்கிறார்கள். அது ஆட்சியின் குறை அல்ல, அவர்கள் சிந்தனையில் ஏற்பட்டு இருக்கும் குறைபாடு.
அவர்கள் தானும் நல்லது செய்ய மாட்டார்கள், அடுத்தவர்களையும் நல்லது செய்ய விட மாட்டார்கள். மக்களுக்கு நல்லது நடந்தால் சில எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பிடிக்காது. அது பற்றி எல்லாம் கவலைப்படாமல் எங்களது கடமையை செய்து கொண்டு இருக்கிறோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
விழுப்புரத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அறிவித்த 11 அறிவிப்புகள்!
* சாத்தனூர் அணையின் உபரி நீர் நந்தன் கால்வாயில் கிடைக்கும் வகையில் ரூ.304 கோடி மதிப்பில் திட்டம்.
* வெள்ளத்தால் சேதமடைந்த தளவானூர் அணைக்கட்டு ரூ.84 கோடியில் புனரமைக்கப்படும்.
* சங்கராபாணி ஆற்றின் குறுக்கே ரூ.30 கோடியில் தடுப்பணை.
* கோலியனூர் உள்ளிட்ட ஒன்றியங்களில், ரூ.35 கோடியில் கூட்டுக்குடி நீர் திட்டம் செயல்படுத்தப்படும்.
* கக்கன் நகரில் ரூ.1.5 கோடி செலவில் பன்னோக்கு சமுதாயக்கூடம்,
* செஞ்சி, மரக்காணத்தில் தலா ரூ.5 கோடியில் தொழில் பயிற்சி நிலையங்கள்.
* திருவாமாத்தூர் கோவில் இடத்தில் ரூ.4 கோடி மதிப்பில் திருமண மண்டபம், உணவருந்தும் இடம்.
* சாலாமேட்டில் ரூ.5 கோடி செலவில் திருப்பாச்சனூர் ஆற்றுப்படுகையில் இருந்து குடிநீர் வழங்கப்படும்.
* நகராட்சி அலுவலக கட்டடம் ரூ.2 கோடி செலவில் டவுன் ஹாலாக மாற்றப்படும்.
* பம்பை ஆற்றின் வடகரையில் அகழ்வாராய்ச்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
* வீடூர் அணையில் இருந்து மயிலம், பாதிராப்புலியூர் வழியாக செல்லும் சாலை ரூ.2.5 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும்.
முன்னதாக, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தெய்வானை அம்மாள் கல்லூரி வரை சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் முதல்வர் ஸ்டாலின் மனுக்களை பெற்றார்.