முன்னாள் எஸ்.ஐ., கொலையில் முக்கிய நபர் சுட்டு பிடிப்பு பணியில் மெத்தன இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் முதல்வர் ஸ்டாலின் உறுதி
முன்னாள் எஸ்.ஐ., கொலையில் முக்கிய நபர் சுட்டு பிடிப்பு பணியில் மெத்தன இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் முதல்வர் ஸ்டாலின் உறுதி
ADDED : மார் 20, 2025 12:33 AM

திருநெல்வேலி:திருநெல்வேலியில் கொலை செய்யப்பட்ட ஓய்வுபெற்ற எஸ்.ஐ., ஜாகீர் உசேன் கொலை பிரச்னையில், முன்பே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபர் தவ்பீக், சுட்டு பிடிக்கப்பட்டார்.
திருநெல்வேலி டவுனை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி, 60. சென்னையில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி, 2009ல் விருப்ப ஓய்வு பெற்றார்.
திருநெல்வேலியில் முஸ்லிம் தர்கா ஒன்றின் நிர்வாகியாக செயல்பட்டார். அந்த தர்காவின் நிலம் தொடர்பாக, ஜாகீர் உசேனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த நுார்நிஷா என்பவருக்கும் பிரச்னை உள்ளது.
நுார்நிஷாவின் இரண்டாவது கணவர், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர், மதம் மாறி, தவ்பீக் என பெயரை மாற்றிக் கொண்டார். தம்மை ஜாதி ரீதியாக திட்டியதாக, கிருஷ்ணமூர்த்தி தந்த புகாரில், ஜாகீர் உசேன் மீது, டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தன்னை கொலை செய்ய திட்டமிடப்படுவதாக, ஜாகீர் உசேன், வீடியோவும் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 5:40 மணிக்கு, தொழுகைக்குச் சென்று திரும்பிய ஜாகீர் உசேனை, ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது.
ஏற்கனவே மிரட்டல் குறித்து வீடியோ வெளியிட்டும், புகார் அளித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில், கொலை நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நடப்பதால், தமிழகம் முழுதும், இந்த கொலை சம்பவம், கவனத்தை ஈர்த்தது. 'கொலையாளிகளை கைது செய்ய வேண்டும், புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், குடும்பத்தினருக்கு பாதுகாப்பு தர வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, ஜாகீர் உசேன் தரப்பினர், அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி பேச்சு நடத்தினார். கொலையாளிகள், கண்டிப்பாக கைது செய்யப்படுவர் என உறுதியளித்தார். இதையடுத்து ஜாகீர் உசேன் உடலை, குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, தவ்பீக்கின் தம்பி கார்த்திக், 32, நுார்நிஷாவின் உறவினர் அக்பர் ஷா, 32, ஆகியோர், நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
தவ்பீக், ரெட்டியார்பட்டியில் தலைமறைவாக இருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று மாலை, 4:00 மணிக்கு, போலீசார் அவரை பிடிக்கச் சென்றபோது அவர், போலீஸ் ஏட்டு ஆனந்த் என்பவரை, அரிவாளால் வெட்ட முயற்சித்தார்.
தற்காப்பிற்காக போலீசார், அவரது இடது காலில், துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். பின் அவர், திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஜாகீர் உசேன் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காத திருநெல்வேலி டவுன் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணனை, 'சஸ்பெண்ட்' செய்து, கமிஷனர் உத்தரவிட்டார்.
ஜாகீர் உசேன் மற்றும் எதிர்தரப்பினர், புகார் பதிவு செய்த காலத்தில், உதவி கமிஷனராக இருந்த செந்தில்குமார் அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டு கோயம்புத்துார் மாநகர போலீஸ் நுண்ணறிவு பிரிவில் உதவி கமிஷனராக உள்ளார்.
அவர் வேறு இடத்தில் பணிபுரிவதால் அவர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்க கமிஷனர், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரைத்துள்ளார்.
சம்பவம் நடந்த பகுதியில் பாதுகாப்பிற்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
நெல்லை படுகொலையில் பாரபட்சமின்றி நடவடிக்கை
சென்னை:ஜாகீர் உசேன் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, சட்டசபையில் நேற்று, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை, பல்வேறு கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் கொண்டு வந்தனர்.
அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
இவ்வழக்கு தொடர்பாக, திருநெல்வேலி தொட்டிப் பாலத் தெருவை சேர்ந்த இருவர், திருநெல்வேலி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். மற்ற குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட ஜாகீர் உசேன், ஜனவரி 8ம் தேதி தனது முகநுால் பக்கத்தில், ஒரு வீடியோவை வெளியிட்டது குறித்தும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. காவல் துறையின் முதற்கட்ட விசாரணையின்படி ஜாகீர் உசேனுக்கும், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்கிற முகமது தவ்பீக் என்பவருக்கும், நிலம் தொடர்பான பிரச்னை இருந்து வந்துள்ளது.
இதுதொடர்பாக தவ்பீக், அவரது மைத்துனர் அக்பர் ஷா ஆகியோர், ஜாகீர் உசேன் மீதும் புகார் அளித்துள்ளனர். அதேபோல், ஜாகீர் உசேனும் எதிர்தரப்பினர் மீது புகார் மனுக்கள் அளித்துள்ளார்.
இவற்றின் மீது காவல் துறையினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, சமூக வலைதளங்களில் ஜாகீர் உசேன் வீடியோ வெளியிட்டதை தொடர்ந்து, அவரை அச்சுறுத்துவதாக குறிப்பிட்ட எதிர் தரப்பினரை அழைத்து சென்று, காவல் துறையினர் விசாரித்துள்ளனர்.
விசாரணை நடந்துவரும் சூழ்நிலையிலேயே, இந்த சம்பவம் நடந்துள்ளது. இக்கொலை வழக்கில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள், அவர்களுக்கு பின்னணியில் இருந்தவர்கள் அனைவர் மீதும் உரிய விசாரணை நடத்தப்பட்டு, பாரபட்சமின்றி நீதியின் முன் நிறுத்தப்படுவர்.
சட்டத்தை யாரும் தங்கள் கையில் எடுத்துக் கொள்ள இந்த அரசு அனுமதிக்காது. இந்த கொலை வழக்கு மட்டுமல்ல; எந்த குற்றத்தில் ஈடுபடுபவராக இருந்தாலும், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
தி.மு.க., நிர்வாகியால் என் உயிருக்கும் ஆபத்து: காங்கிரஸ் பிரமுகர் வீடியோ
தமிழக காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு முன்னாள் ஒருங்கிணைப்பாளர் முகமது இஸ்மாயில், சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு:புதுக்கோட்டை மாவட்டத்தில், கனிமவள கொள்ளையை தட்டிக்கேட்ட ஜெகபர் அலியும், திருநெல்வேலியில் வக்பு நிலம் அபகரிப்பை தட்டிக்கேட்ட ஜாகீர் உசேனும் கொலை செய்யப்பட்டு உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அம்மாபேட்டையில் எங்களுக்கு சொந்தமான நிலத்தில், தி.மு.க., நிர்வாகிகள் ஆக்கிரமித்து, கட்சி அலுவலகம் கட்ட முயற்சித்தனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த என்னையும், என் தம்பி கலீல் ரகுமானையும் கொலை செய்வதாக, தாசில்தார், இன்ஸ்பெக்டர்கள் முன்னிலையில், தி.மு.க., நிர்வாகிகள் மிரட்டினர்.
அமைச்சர் ரகுபதியிடம் புகார் தெரிவித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் உயிருக்கு தி.மு.க., நிர்வாகிகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

