பசுமை மின் திட்டங்களுக்கு முதலீட்டை ஈர்க்க திட்டம்
பசுமை மின் திட்டங்களுக்கு முதலீட்டை ஈர்க்க திட்டம்
ADDED : ஆக 19, 2024 07:01 AM
சென்னை : இம்மாத இறுதியில் அமெரிக்கா செல்லும் முதல்வர் ஸ்டாலின், மின்சார வாகனம், பசுமை மின்சாரத்தை சேமிக்கும், 'பேட்டரி ஸ்டோரேஜ்' உள்ளிட்ட பசுமை திட்டங்களில், முதலீட்டை ஈர்க்க திட்டமிட்டுள்ளார்.
தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியாவில் மோட்டார் வாகனம் மற்றும் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதேபோல, பசுமை திட்டங்களிலும் முதலிடம் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அத்துடன், நம் நாட்டில், சூரியசக்தி மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் உடனுக்குடன் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில், 'பேட்டரி ஸ்டோரேஜ்' எனப்படும் மின்சாரத்தை சேமிக்கும் தொழில்நுட்பத்தில், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. பின், சேமிக்கப்படும் மின்சாரம் தேவைக்கேற்ப பயன்படுத்தப்படுகிறது.
அதனால், 15 நாள் பயணமாக வரும், 27ம் தேதி அமெரிக்கா செல்லும் முதல்வர் ஸ்டாலின், அந்நாட்டில் மின்சார வாகனங்கள், பசுமை மின் திட்டங்கள், பேட்டரி ஸ்டோரேஜ் உள்ளிட்ட பசுமை திட்டங்கள், சுகாதாரம், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து, தமிழகத்தில் தொழில் துவங்க வரும்படி அழைப்பு விடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.