10,000 பணியிடங்கள் நிரப்பப்படும் முதல்வர் ஸ்டாலின் தகவல்
10,000 பணியிடங்கள் நிரப்பப்படும் முதல்வர் ஸ்டாலின் தகவல்
ADDED : பிப் 17, 2024 12:19 AM
சென்னை:''தமிழக அரசு பணிகளில், வரும் ஜூன் மாதத்திற்குள், 10,000 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த, 'மக்களுடன் முதல்வர்' திட்டப் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்; 1,598 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
அரசு அலுவலகங்களுக்கு மக்கள் சென்று, சேவைகளை பெறும் நிலையை மாற்றி, அரசின் சேவைகளை, மக்களுக்கு நெருக்கமாக கொண்டு போய் சேர்த்து, அனைத்து மக்களுக்கும் எளிதில் கிடைக்க செய்வது தான், இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.
முதற்கட்டமாக, அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் 2,058 முகாம்கள் நடத்தப்பட்டன. இரண்டாம் கட்டமாக, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள, ஊரகப் பகுதிகளில் இந்த முகாம் நடத்தப்பட்டிருக்கிறது.
முதலில் பெறப்பட்ட மனுக்களை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர். அதன்பின், துறைக்கு அனுப்புகின்றனர். இதன் வழியாக, 30 நாட்களில் 3.50 லட்சம் பயனாளிகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட உள்ளன.
வருவாய் துறையில், 42,962 பட்டா மாறுதல்; 18,236 பேருக்கு பல்வேறு வகையான சான்றிதழ்; மின் வாரியத்தில் 26,383 பேருக்கு புதிய மின் இணைப்புகள், பெயர் மாற்றம்; நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வழியாக, 37,705 பேருக்கு வரி விதிப்பு.
குடிநீர், கழிவுநீர் இணைப்பு, கட்டட அனுமதி, பிறப்பு, இறப்பு பதிவுகள் போன்றவை செய்து தரப்பட்டுள்ளன.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை வழியே, 1,190 பேருக்கு 60.75 கோடி ரூபாய் மதிப்பில் தொழில் கடன் உதவி செய்து தரப்பட்டுள்ளது.
மக்கள் அளிக்கும் ஒவ்வொரு மனுவுக்கும் முடிவு காண்பதே முக்கியம் என்று நினைக்காமல், விடிவு காண்பதே நோக்கம் என்று செயல்பட்டால் தான், அரசு மேல் ஏழைகள் வைத்திருக்கக் கூடிய நம்பிக்கை வலுவடையும்.
அத்தகைய நம்பிக்கையை விதைக்கிற திட்டமாக, மக்களுடன் முதல்வர் திட்டம் அமைந்துள்ளது. இதுவரை 60,567 இளைஞர்களுக்கு, அரசு பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட பல்வேறு அரசுத் தேர்வாணைய முகமைகள் வழியே, 27,858 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
அடுத்த இரண்டு ஆண்டு களில், மேலும் 50,000 புதிய பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள், 10,000 பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, 1,598 பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு முதல்வர் பேசினார்.