மாய உலகில் மூழ்கி கொண்டு இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
மாய உலகில் மூழ்கி கொண்டு இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
ADDED : ஜன 25, 2026 05:56 AM

சென்னை: 'தி.மு.க.,வை மீண்டும் தேர்ந்தெடுத்து, தமிழக மக்கள், தங்களை தாங்களே அழித்துக் கொள்ள மாட்டார்கள்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
கடந்த 13 ஆண்டுகளாக போராடும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு, பணி நிரந்தரம் வழங்க முடியாது என்றும், பிற அரசு பணிகளில் சேர விண்ணப்பிக்கும்போது, அவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பகுதிநேர ஆசிரியர்களில் பெரும்பாலானோர், 45 வயதை கடந்தவர்கள். அவர்களால் அரசு பணிக்கு விண்ணப்பிக்க முடியாது. எனவே, சிறப்பு மதிப்பெண் வழங்குவதாக கூறுவது, அவர்களுக்கு செய்யும் துரோகம்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உட்பட, அனைத்துத் தரப்பினருக்கும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு துரோகம் செய்த முதல்வர் ஸ்டாலின், 'மீண்டும் மீண்டும் தி.மு.க.,தான் ஆட்சிக்கு வரும்' என, சட்டசபையில் வீரவசனம் பேசியிருக்கிறார். அவர் எந்த அளவுக்கு மாய உலகில் மூழ்கிக் கொண்டிருக்கிறார் என்பதற்கு, இதுவே சான்று. தமிழக மக்கள் மிகவும் அறிவார்ந்தவர்கள். தி.மு.க.,வை தேர்ந்தெடுப்பதன் வாயிலாக, தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ள மாட்டார்கள். ஆசிரியர் தகுதித் தேர்வு, வரும் ஜூலை, டிசம்பர் மாதங்களில் தான் நடக்கும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதன் வாயிலாக, உச்ச நீதிமன்ற தீர்ப்பால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் வாழ்வாதார பிரச்னைக்கு எந்தத் தீர்வையும் வழங்காமல், அவர்களுக்கும் மிகப்பெரிய துரோகத்தை தி.மு.க., அரசு செய்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

