டில்லி மனோபாவம் மாறும்வரை போராட்டம் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்
டில்லி மனோபாவம் மாறும்வரை போராட்டம் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்
ADDED : ஏப் 23, 2025 02:42 AM
சென்னை:''டில்லியின் ஆதிக்க மனோபாவம் மாறும் வரை, நம் போராட்டம் தொடரும்'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
'திராவிட அறநெறியாளர் தமிழ்வேள் பி.டி.ராஜன் வாழ்வே வரலாறு' என்ற நுால் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. விழாவில், நுாலை வெளியிட்டு, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
நீதிக்கட்சியின் முன்னோடிகளில் ஒருவரான பி.டி.ராஜன் வரலாற்று நுாலை வெளியிடுவதை பெருமையாகக் கருதுகிறேன். அவர் வழித்தடத்தில்தான் இன்றும் நாம் பயணித்து வருகிறோம்.
நீதிக்கட்சிக்கு இறுதி என்பதே கிடையாது. நீதிக்கட்சியின் நீட்சிதான் தி.மு.க.,. சமூக நீதி, மாநில சுயாட்சி போன்றவற்றில் அரசியல் கொள்கையாக, ஆட்சியின் கொள்கையாக மாற்றியது நீதிக்கட்சி.
தியாகராஜன் மட்டும் வாரிசு அல்ல. நானும் வாரிசுதான். திராவிட வாரிசு. சிலருக்கு வாரிசு என்ற சொல்லைக் கேட்டாலே எரிகிறது. அவர்களுக்கு எரியட்டும் என்று தான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன்.
பி.டி. ராஜன் காலத்தில் நீதிக்கட்சியை குழிதோண்டி புதைக்க வேண்டும் என, ஒரு தலைவர் கூறினார். ஆனால், அவரது தொடர்ச்சியாக, பழனிவேல் ராஜன் வந்தார்.
இப்போது தியாகராஜன் நம்மோடு இருக்கிறார். தியாகராஜனை பொருத்தவரை, அறிவார்ந்த வலிமையான வாதங்களை வைப்பவர். இந்த சொல்லாற்றல், அவருக்கு பாதகமாக மாறிவிடக்கூடாது.
இதை அவர் மீது கொண்ட அக்கறையுடன் சொல்கிறேன். நான் ஏன் சொல்கிறேன் என, அவருக்கு தெரியும். நம்முடைய எதிரிகள் வெறும் வாயையே மெல்லக்கூடிய வினோத ஆற்றல் பெற்றவர்கள்.
அவர்களின் அவதுாறுகளுக்கு உங்களின் சொல் அவலாக ஆகிவிடக் கூடாது. என் சொல்லை தட்டாத தியாகராஜன், என் அறிவுரையை எடுத்துக் கொள்வார்.
நாங்கள் ஹிந்தி எதிர்ப்பாளர்கள் அல்ல; ஹிந்தியை திணிப்பவர்களின் எதிர்ப்பாளர்கள் என, அன்றே பி.டி.ராஜன் விளக்கமாக பேசியுள்ளார். அவர் அன்று சொன்னதை, நாம் இன்று சொல்கிறோம்.
டில்லியின் ஆதிக்க மனோபாவம் மாறவில்லை. நம்முடைய போராட்ட குணமும் ஓயவில்லை. எதிரிகளின் முகங்கள்தான் மாறி உள்ளன. எண்ணங்கள் மாறவில்லை; அது மாறும் வரை நம் போராட்டம் தொடரும்.
கொள்கை பிடிப்புள்ள இந்த தமிழ் மண்ணை, யாராலும் வெல்ல முடியாது. சமூக நீதி, மாநில சுயாட்சி உள்ளிட்ட திராவிட இயக்கக் கொள்கைகள் கோடிக்கணக்கான மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
விழாவில் அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் தியாகராஜன், அவரது தாயார் ருக்மணி பழனிவேல் ராஜன், ஹிந்து என் ராம், டி.வி.எஸ்., தலைவர் வேணுசீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.