தமிழர் நிதி நிர்வாக ஆவண நுால் முதல்வர் ஸ்டாலின் வெளியீடு
தமிழர் நிதி நிர்வாக ஆவண நுால் முதல்வர் ஸ்டாலின் வெளியீடு
ADDED : மார் 18, 2025 05:04 AM

சென்னை; தமிழக அரசின் நிதித்துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள, 'தமிழர் நிதி நிர்வாகம்; தொன்மையும், தொடர்ச்சியும்' ஆவண நுாலை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டு, அதற்கான சிறப்பு இணைய தளத்தையும் துவக்கி வைத்தார்.
சங்க காலம் முதல் சமூக நீதிக்காலம் வரையிலான, தமிழர்களின் நிதி நிர்வாக சிறப்புகளின் பெருந்தொகுப்பாகவும், வரலாற்று ஆவணமாகவும், 'தமிழர் நிதி நிர்வாகம்; தொன்மையும் தொடர்ச்சியும்' நுால் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில், பண்டைய வணிகம், வரி விதிப்பு முறைகள், காலனிய கால நிதி நிர்வாக நடைமுறைகள், நவீன தமிழகத்தின் நிதிநிலை அறிக்கைகள் ஆராயப்பட்டுள்ளன.
இந்த ஆவண நுாலில், பொருளியல், வரலாற்று துறைகளை சேர்ந்த, தமிழகத்தின் புகழ்பெற்ற அறிஞர்களின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
இந்நுாலை நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட, அமைச்சர் தங்கம் தென்னரசு பெற்றுக் கொண்டார். அத்துடன், https://www.tamildigitallibrary.in.budget என்ற இணையதளத்தையும், முதல்வர் துவக்கி வைத்தார்.
இதில், நுாற்றாண்டு கால நிதிநிலை அறிக்கைகள், விரிவான திட்ட மதிப்பீடுகள், பட்ஜெட் தொடர்பான செய்திக் கட்டுரைகள், இதழ்கள், நுால்கள், ஒளிப்படங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்நுாலை, இணைய பக்கத்தில் வாசிக்கலாம். நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் முருகானந்தம், நிதித்துறை செயலர் உதயச்சந்திரன் பங்கேற்றனர்.