தன்னை எம்.ஜி.ஆர்.,- ஜெயலலிதா என நினைத்து சவுண்டு விடுகிறார் பழனிசாமி முதல்வர் ஸ்டாலின் கிண்டல்
தன்னை எம்.ஜி.ஆர்.,- ஜெயலலிதா என நினைத்து சவுண்டு விடுகிறார் பழனிசாமி முதல்வர் ஸ்டாலின் கிண்டல்
UPDATED : ஆக 12, 2025 12:59 PM
ADDED : ஆக 12, 2025 03:59 AM

உடுமலை: “தன் கோட்டை என பழனிசாமி பேசிக்கொண்டிருக்கும் மேற்கு மண்டலத்தில் இருந்தே, அ.தி.மு.க.,வின் தோல்வி துவங்கும்,” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலையில், 1,426.89 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை துவக்கி வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கினார். விழாவில், ஸ்டாலின் பேசியதாவது:
கடந்த நான்கு ஆண்டுகளில், திருப்பூர் மாவட்டத்தில் 133 கோவில்களுக்கு கும்பாபிஷேகம்; 804 கோவில்கள் சீரமைப்பு; ஐந்து ஜவுளி பூங்காக்கள்; ஒன்பது பாலங்கள்; தற்போது டைடல் பார்க் என திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
அகழாய்வு
கொங்கல் பகுதியில், முதற்கட்ட அகழாய்வு நிறைவு பெற்றுள்ளது. அத்திக்கடவு - அவிநாசி திட்டம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 4 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும் பி.ஏ.பி., பாசன திட்டம் துவங்கிய அக்., 7, பி.ஏ.பி., நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் நிலுவையிலுள்ள நீராறு, நல்லாறு, ஆனைமலையாறு திட்டத்தை செயல்படுத்த கேரள அரசுடன் பேசி வருகிறோம். இந்த ஆண்டு, 10 கோடி ரூபாய் செலவில், பி.ஏ.பி., பாசன கால்வாய்கள் துார்வாரப்படும். ஊத்துக்குளியில் வெண்ணெய் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும்.
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி இங்கு வந்தால், 'தன்னை மேற்கு மண்டலத்துக்காரர்' என்கிறார். அவர் எந்த தைரியத்தில், இங்கிருந்து பிரசாரத்தை துவங்கினார் என தெரியவில்லை.தி.மு.க., ஆட்சியில், மேற்கு மண்டலத்திற்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம். நிச்சயமாக சொல்கிறேன்; 2026ல், அ.தி.மு.க.,வின் தோல்வி இங்கிருந்து தான் துவங்கும்.
ஊர், ஊராக, சுந்தரா டிராவல்ஸ் பஸ்சில் சென்று, பொய்களை உரக்கப்பேசினால், தன் அலங்கோல ஆட்சியை மறந்து, மக்கள் நம்புவர் என பழனிசாமி நினைக்கிறார். அவர் ஆசையில் மண் விழுவது போல், 'உங்களுடன் ஸ்டாலின்; நலன் காக்கும் ஸ்டாலின்' போன்ற திட்டங்கள் மக்களிடம் 'ஹிட்' ஆகிவிட்டன.
அடிமேல் அடி
அந்த வயிற்றெரிச்சலில், நீதிமன்றம் சென்றனர்; ஆனால், 10 லட்சம் ரூபாய் நன்கொடை தரும் வகையில் உச்ச நீதிமன்றம் அபராதம் விதித்தது. தொடர்ந்து அடிமேல் அடி விழுவதால் விரக்தியின் உச்சத்திற்கு சென்று, முதல்வர் என்ற மரியாதை கூட இல்லாமல், தரம் தாழ்ந்து என்னை ஒருமையில் பழனிசாமி பேசி வருகிறார்.
தன்னை எம்.ஜி.ஆர்., - ஜெ., என நினைத்து 'சவுண்டு' விடுகிறார். அவருக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, விழாவிற்கு வரும் வழியில் வாகனத்தில் இருந்து இறங்கி சாலையில் நடந்து சென்ற ஸ்டாலின், இருபுறமும் இருந்த மக்களிடம் கைகொடுத்து மனுக்கள் பெற்றார்.