கீழடி போராட்டம் ஓயவே ஓயாது முதல்வர் ஸ்டாலின் கடிதம்
கீழடி போராட்டம் ஓயவே ஓயாது முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ADDED : ஜூன் 20, 2025 03:20 AM
சென்னை: 'கீழடி விவகாரத்தில், தமிழரின் பண்பாட்டு பெருமையை நிலைநாட்டும் வரை, தி.மு.க., போராட்டம் ஓயவே ஓயாது' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
கட்சி தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:
சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடந்த அகழாய்வுகள், தமிழர்களின் நாகரிகம் தனித்துவமானது என்பதையும், தமிழர்களின் பண்பாடு மிகவும் தொன்மையானது என்பதையும், ஆதாரப்பூர்வமாக மெய்ப்பித்த அகழாய்வு.
தொல்லியல் பணிகளை மேற்கொண்ட இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணாவை, அசாம் மாநிலத்திற்கு இடமாறுதல் செய்து, தமிழ் பண்பாட்டின் மீது வெறுப்புணர்வை, மத்திய அரசு அப்பட்டமாக காட்டியது.
கீழடி அகழாய்வின் வாயிலாக, தமிழர்களின் வைகை ஆற்று நாகரிகம், 2,500 ஆண்டுகள் முதல் 3,000 ஆண்டுகள் வரை பழமையானது என்பது தெளிவாகிறது.
அகழாய்வுகள் நடத்தியபோது, அ.தி.மு.க., ஆட்சி நடந்தது. ஆனால், கீழடி அகழாய்வு முடிவுகளை ஏற்க மறுக்கும் மத்திய அரசின் மொழிவெறி,- இனவெறி நடவடிக்கை பற்றி, அ.தி.மு.க., இதுவரை வாய் திறக்கவில்லை.
ஏற்கனவே முன்னாள் முதல்வர் பழனிசாமி அமைச்சரவையில் இருந்த ஒருவர், தமிழர் நாகரிகமான கீழடியை, 'பாரத நாகரிகம்' என, பா.ஜ., மனம் குளிரும் வகையில் கூறியுள்ளார். தமிழக பா.ஜ.,வினரும் தங்கள் இன, மொழி உணர்வை, பதவிக்காக தலைமையிடம் விற்றுவிட்டு, தமிழர்களுக்கு துரோகம் இழைத்து வருகின்றனர்.
கீழடியிலும், சென்னையிலும் ஒலித்திருப்பது முதல் கட்ட முழக்கம். இது டில்லி வரை தொடர்ந்து எதிரொலிக்கும். தமிழரின் பண்பாட்டு பெருமையை நிலைநாட்டும் வரை போராட்டம் ஓயவே ஓயாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.