டாஸ்மாக் மதுக்கடைகளில் முதல்வர் ஸ்டாலின் படம்: தமிழகம் முழுவதும் பா.ஜ., நூதன போராட்டம் துவக்கம்
டாஸ்மாக் மதுக்கடைகளில் முதல்வர் ஸ்டாலின் படம்: தமிழகம் முழுவதும் பா.ஜ., நூதன போராட்டம் துவக்கம்
UPDATED : மார் 19, 2025 08:06 PM
ADDED : மார் 19, 2025 08:05 PM

சென்னை: டாஸ்மாக் மதுக்கடைகள் முன், முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டி பா.ஜ., தொண்டர்கள் நடத்திய போராட்டம், இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி சில நாட்களுக்கு முன் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். இதில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த ஊழலை கண்டித்து பாஜக சார்பில் டாஸ்மாக் நிறுவனம் முன் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் போராட்டத்திற்கு புறப்பட்ட பா.ஜ., தலைவர்களை தமிழக போலீசார், பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இதையடுத்து, இனிமேல் எந்த ஒரு போராட்டமும் தேதி குறிப்பிடாமல் நடத்தப்படும் என்று மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.
தமிழகம் முழுவதும் ஐந்தாயிரம் டாஸ்மாக் கடைகள் முன் முதல்வர் ஸ்டாலின் படம் ஒட்டப்படும் என்றும் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்கள், டாஸ்மாக் கடைகளுக்கு முன்பாக இன்று முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டினர். சில இடங்களில் பிரேம் செய்த போட்டோக்களையும் மாட்டியுள்ளனர்.ஒரு சில இடங்களில் போலீசார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் இல்லாத இடங்களில், பா.ஜ., கட்சியினர் முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
கைது
கோவையில் டாஸ்மார்க் கடையில் ஸ்டாலின் புகைப்படத்தை ஒட்டிய பா.ஜ., மகளிர் அணி சேர்ந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டு சிவானந்தா காலனி ஆறு முக்கு பகுதியில் உள்ள கர்நாடகா அசோசியேசன் மண்டபத்தில் வைத்துள்ளனர். தற்பொழுது பா.ஜ.,வினர் கூடி வருவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. போலீசாரை கண்டித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.