2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் பிரதமருக்கு முதல்வர் நன்றி
2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் பிரதமருக்கு முதல்வர் நன்றி
ADDED : அக் 27, 2024 12:10 AM

சென்னை:சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில், முதல்வர் ஸ்டாலின், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் துறை, மின் துறை அமைச்சர் மனோகர் லால் தலைமையில் நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது.
முதற்கட்ட பணி
இதில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
கடந்த 2007ம் ஆண்டு தமிழக அரசு, மத்திய அரசும் இணைந்து, மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்ட பணிகளை துவக்கியது.
இந்த திட்டம், 22,150 கோடி ரூபாய் மதிப்பில், 54.1 கி.மீ., துாரத்திற்கு, இரண்டு வழித்தடங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
தினமும், 3.10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.
இதையடுத்து, 63,246 கோடி ரூபாயில், 118.9 கி.மீ., துாரத்துக்கு மூன்று வழித்தடங்களில், இரண்டாம் கட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறோம்.
இதுவரை, 19,229 கோடி ரூபாய் செலவிட்டு, பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டம் செயல்படுத்தப்பட்ட, அதே முறையில் இரண்டாவது கட்டப் பணிகளையும் செயல்படுத்த வேண்டும் என, பலமுறை வலியுறுத்திய கோரிக்கையை ஏற்று, அதற்கான ஒப்புதலை சமீபத்தில் அளித்த பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் நன்றி.
சென்னை மாநகரின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பில் முதுகெலும்பாக விளங்கும், மெட்ரோ ரயில் போக்குவரத்தின் இரண்டாம் கட்ட திட்டமும் செயல்பாட்டிற்கு வரும் நிலையில், மொத்தம், 172 கி.மீ., மெட்ரோ ரயில் கட்டமைப்பாக இருக்கும்.
முன்னுரிமை
இந்த இரண்டாவது கட்டத்திற்கான, பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
குறிப்பிட்ட கால வரையறைக்குள், இந்த பணிகளை முடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும், அரசும், அலுவலர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கிடையே, சென்னை புறநகரை ஒட்டிய முக்கிய பகுதியான விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான வழித்தடம்; கோவை மற்றும் மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான செயற்குறிப்புகளுக்கும் முன்னுரிமை அளிக்குமாறு, மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.