மழையால் பாதித்தவர்களுக்கு இழப்பீடு: இன்று ஆலோசனை நடத்துகிறார் முதல்வர்
மழையால் பாதித்தவர்களுக்கு இழப்பீடு: இன்று ஆலோசனை நடத்துகிறார் முதல்வர்
ADDED : டிச 01, 2024 11:41 PM

சென்னை: ''மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து, இன்று தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. புயல் பாதிப்பை பார்வையிட மத்திய குழுவை அனுப்பும்படி, மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
நேற்று அவர் அளித்த பேட்டி:
சென்னையில் கனமழை பெய்தது. அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் துார் வாரும் பணிகளால், பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கவில்லை.
வடசென்னை பகுதியில் மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு, மழைநீர் அகற்றப்பட்டது. மழைநீர் தேங்கும் இடங்களில், அதை வெளியேற்ற, 1,686 மோட்டார்கள் தயாராக உள்ளன.
சென்னையில், 32 முகாம்கள் அமைக்கப்பட்டு, 1,018 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு, 9.10 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.
22,000 பேர்
நேற்று முன்தினம் அம்மா உணவகத்தில், 1.07 லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது. சென்னை மாநகராட்சி அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள் என, 22,000 பேர் மழை மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் பணியில், 2,149 களப்பணியாளர்கள் உள்ளனர். எதையும் எதிர்கொண்டு சமாளிக்கும் வகையில், சென்னை தயார் நிலையில் உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துள்ளது. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
விழுப்புரத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்கள் சிவசங்கர், செந்தில் பாலாஜி ஆகியோரை அனுப்பி உள்ளேன்.
அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன் ஆகியோர் கடலுார் மாவட்டத்தில் மீட்புப் பணியில் உள்ளனர்.
அத்துடன், விழுப்புரம் மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதமாக செய்ய, பொதுப்பணித்துறை செயலர் மணிவாசகன் தலைமையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஜான், கிரண் குர்லா, பொன்னையா, சிவராசு ஆகியோர் அனுப்பப்பட்டு உள்ளனர்.
நால்வர் குழு
கண்காணிப்பு அலுவலர்களும் அங்கு முகாமிட்டு பணிகளை கண்காணித்து வருகின்றனர். கடலுார் மாவட்டத்திற்கு ககன்தீப்சிங் பேடி தலைமையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராமன் மற்றும் இரண்டு மாவட்ட வருவாய் அலுவலர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
கடலுார், விழுப்புரம் என, இரண்டு மாவட்டங்களிலும் பாதிப்புகளை பார்வையிட்டு, பணிகளை துரிதப்படுத்த, துணை முதல்வர் சென்றுள்ளார்.
மாநில பேரிடர் மீட்புப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை விழுப்புரம்
தெடர்ச்சி 13ம் பக்கம்
சென்றுள்ளது. பிற மாவட்டங்களில் இருந்து, துாய்மை பணியாளர்கள் விழுப்புரம் அனுப்பப்பட்டு உள்ளனர். இரு மாவட்டங்களிலும், 26 முகாம்களில், 1,373 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
விழுப்புரம், கடலுார், செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க, தேவையான நிதி வழங்க, மத்திய குழுவை அனுப்பி வைக்கும்படி கேட்க உள்ளோம். திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி பகுதிகளில், மழை அதிகம் இருக்கும் என்பதால், அந்த மாவட்ட நிர்வாகங்களை தயாராக இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளோம்.
இன்னும் பல மாவட்டங்களில், மழை பெய்து வருகிறது. மழை குறைந்த பிறகு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மழைநீர் வடிந்த பிறகு பயிர் சேதம் குறித்து முறையாக கணக்கிடப்படும். இழப்பீடு தொகை வழங்குவது குறித்து, அப்போது தான் முடிவெடுக்க முடியும். இன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன், தலைமை செயலகத்தில் கூட்டம் நடத்த உள்ளோம். அதில், கலந்து பேசி முடிவெடுத்து, அதன்பிறகு மத்திய அரசுக்கு விளக்கமாக கடிதம் எழுத உள்ளோம்.
தேவைப்பட்டால் நான் விழுப்புரம், கடலுார் மாவட்டத்திற்கு செல்வேன். மத்திய அரசிடம் கேட்கும் நிதி கிடைக்கும் என்று நம்புகிறோம். கடந்த முறை நிதி கேட்டோம்; தரவில்லை. இம்முறையும் கேட்போம். தராவிட்டாலும் சமாளிப்போம்; நல்லதையே நினைப்போம்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.