ADDED : ஜன 26, 2025 06:54 AM

சென்னை: டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிராக போராடிய மக்களை சந்திப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் இன்று மதுரை அரிட்டாபட்டி செல்கிறார்.
மதுரை மாவட்டம் மேலுார் அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, தனியார் நிறுவனத்திற்கு ஏலம் விடப்பட்டது.
இதை எதிர்த்து, அப்பகுதி மக்கள் போராடி வந்த நிலையில், டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 'டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்க மாட்டோம்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
'டங்ஸ்டன் சுரங்கம் கண்டிப்பாக வராது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும் உறுதி அளித்திருந்தார்.
அவரது தலைமையில் டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டக் குழுவினர், டில்லியில் மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து பேசினர். அதைத் தொடர்ந்து, டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
'இது தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி' என, முதல்வர் ஸ்டாலினும்; 'பா.ஜ., எடுத்த முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி' என, அண்ணாமலை உள்ளிட்டோரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, அரிட்டாபட்டி மக்களை சந்திக்க இருப்பதாகவும், அங்கு அவருக்கு பாராட்டு விழா நடக்க இருப்பதாகவும் செய்தி வெளியானது.
இச்சூழலில், சென்னை தலைமை செயலகத்தில் டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டக் குழுவினர், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர். குடியரசு தினமான இன்று, அரிட்டாபட்டியில் நடக்கும் நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்கவும் அழைப்பு விடுத்தனர்.
முதல்வரை சந்தித்த பின், டங்ஸ்டன் போராட்டக் குழுவைச் சேர்ந்த பழனியாண்டி அளித்த பேட்டி:
கிராம மக்கள் ஒன்றுகூடி முடிவு எடுத்து, அமைச்சர் மூர்த்தியிடம் முறையிட்டோம்.
தான் முதல்வராக இருக்கும் வரை, டங்ஸ்டன் திட்டத்தை வர விட மாட்டேன் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்; சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றினார். அதனால், திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், முதல்வர் இன்று அரிட்டாபட்டி செல்ல இருப்பதாகவும், அங்கு அவருக்கு பாராட்டு விழா நடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.