சட்டம் - ஒழுங்கு பிரச்னையை திசை திருப்ப அரசு விழாக்கள் நடத்துவதில் முதல்வர் ஆர்வம் சொல்கிறார் உதயகுமார்
சட்டம் - ஒழுங்கு பிரச்னையை திசை திருப்ப அரசு விழாக்கள் நடத்துவதில் முதல்வர் ஆர்வம் சொல்கிறார் உதயகுமார்
ADDED : டிச 23, 2024 06:22 AM
மதுரை : ''தமிழகத்தில் நிலவும், சட்டம் - ஒழுங்கு பிரச்னையை திசை திருப்பும் வகையில், அரசு விழாக்களை நடத்துவதில் முதல்வர் ஸ்டாலின் ஆர்வம் காட்டுகிறார்,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றம் சாட்டினார்.
மதுரையில் அவர் நேற்று கூறியதாவது:
சட்டசபையில் மக்கள் பிரச்னைகளை பேச எதிர்க்கட்சிக்கு போதிய நேரம் ஒதுக்கவில்லை. கள்ளச்சாராய சாவுகள், சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்து பழனிசாமி பேசும் போது, நேரலையை துண்டித்து ஒருதலைபட்சமாக செயல்படுகின்றனர். ஆனால், ஆளும் கட்சி அமைச்சர்கள், உறுப்பினர்கள் பேசும் போது மட்டும் தடைஏற்படுவதில்லை.
கிருஷ்ணகிரி நீதிமன்ற வளாகத்தில் நடந்த சம்பவத்தின் அதிர்ச்சி மறைவதற்குள், திருநெல்வேலியிலும் கொலை சம்பவம் நடந்துள்ளது.
அதை போலீசார் வேடிக்கை பார்த்ததை நீதிபதிகள் கண்டித்து, போலீஸ் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளனர்.
இவ்வளவு களேபரம் நடந்து, சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஆனால், முதல்வர் ஸ்டாலின் எதுவுமே நடக்காதது போல அரசு செலவில் விழாக்களை நடத்தி மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறார். 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறுகின்றனர்.
ஆனால், மக்கள் ஓட்டளிக்க தயாராக இல்லை. வரும் சட்டசபை கூட்டத்தொடரில், தி.மு.க., அளித்த வாக்குறுதிப்படி ஆண்டுக்கு, 100 நாட்கள் சபை நடக்க முதல்வர் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உதயகுமார் கூறினார்.