1.55 லட்சம் டன் உரம் தமிழகத்திற்கு வழங்கும்படி பிரதமருக்கு முதல்வர் கடிதம்
1.55 லட்சம் டன் உரம் தமிழகத்திற்கு வழங்கும்படி பிரதமருக்கு முதல்வர் கடிதம்
ADDED : செப் 17, 2025 12:01 AM
சென்னை:'தமிழகத்திற்கு தேவையான உரங்களை வழங்க, மத்திய ரசாயனம் மற்றும் உர அமைச்சகத்திற்கு, பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் எழுதியுள்ள கடிதம்:
வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும், தமிழக அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. தமிழகத்தில், ஜூன் முதல் நெற்பயிர் முழுவீச்சில் பயிரிடப்பட்டு உள்ளது. தற்போதைய நிலவரப்படி, 13.9 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இது, கடந்த ஆண்டை விட, 10 சதவீதம் அதிகம்.
இதனால், மாநிலம் முழுதும் உரங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. மாநிலத்தில் பெய்து வரும் பரவலான மழை மற்றும் முக்கிய நீர்த்தேக்கங்களில் போதுமான அளவில் தண்ணீர் உள்ளது. ஆனால், வேளாண் உற்பத்திக்கு தேவைப்படும் யூரியா, டி.ஏ.பி., - எம்.ஓ.பி., கூட்டு உரங்களை, மத்திய அரசின் திட்டப் படி, ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை வழங்கவில்லை.
மொத்த ஒதுக்கீட்டில், 57 சதவீதம் மட்டும்தான் இதுவரை வழங்கப்பட்டு உள்ளன. எனவே, உரப் பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில் தமிழகத்திற்கு, 27,823 டன் யூரியா; 15,831 டன் டி.ஏ.பி., உரம்; 12,422 டன் எம்.ஓ.பி., உரம்; 98,623 டன் கூட்டு உரங்களை உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.