மத்திய அரசு நிறுத்திய கல்வி நிதி கேட்டு வழக்கு; நுால் வெளியீட்டு விழாவில் முதல்வர் அறிவிப்பு
மத்திய அரசு நிறுத்திய கல்வி நிதி கேட்டு வழக்கு; நுால் வெளியீட்டு விழாவில் முதல்வர் அறிவிப்பு
UPDATED : மே 18, 2025 07:52 AM
ADDED : மே 18, 2025 02:40 AM

சென்னை: ''மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ள கல்வி நிதியை வழங்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் எழுதியுள்ள, 'தேசிய கல்வி 2020 எனும் மதயானை' என்ற நுால் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. நுாலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட, மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய்சிங், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால கவுடா, 'இஸ்ரோ' முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் பெற்றுக் கொண்டனர். துணை முதல்வர் உதயநிதி வரவேற்புரை ஆற்றினார்.
விழாவில் முதல்வர் பேசியதாவது: ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், கொள்கையை ஒரு போதும் விட்டுத்தர மாட்டோம். 'புதிய கல்விக் கொள்கை எனும் மத யானையை, தமிழகத்தில் அனுமதிக்க கூடாது' என, அன்றே கருணாநிதி எச்சரித்தார்.
இட ஒதுக்கீடு
அந்த வரியையே தலைப்பாக்கி, மகேஷ் புத்தகம் எழுதியுள்ளார். அனைத்தையும் காவி மயமாக்க வேண்டும். அதற்கு முதலில் கல்வியை காவி மயமாக்க வேண்டும் என்பதற்காக, தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளனர். தேசிய கல்விக் கொள்கையை ஏன் எதிர்க்கிறோம் என்பதை, சமூக நீதி பார்வையுடன், மகேஷ் எழுதியுள்ளார். பா.ஜ., வின் செயல்பாடுகளை பார்த்து தான், தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று, திட்டவட்டமாக சொல்கிறோம்.
இன்றைய நமது உயர்வுக்கு அடித்தளம் கல்வி தான். நீதிக்கட்சி காலம் முதல் கல்வி உரிமைக்காகவே போராடி வருகிறேம். தேசிய கல்விக்கொள்கை, இடஒதுக்கீட்டை சிதைத்து விடும். இட ஒதுக்கீடு இருக்கும் வரை, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உயர்கல்வி கிடைக்கும். பன்முக பண்பாட்டை, தேசிய கல்விக் கொள்கை தகர்க்கும்.
கடந்த, 75 ஆண்டுகளாக கட்டமைக் கப்பட்ட ஒருமைப்பாட்டை சிதைத்து, சமஸ்கிருத பண்பாடு உடைய, ஒற்றை தேசியத்தை உருவாக்குவது தான், மத்திய பா.ஜ., அரசின் ஒரே நோக்கம். 'தேசிய கல்விக் கொள்கையால், சமஸ்கிருதம் வளரும்' என, உள்துறை அமைச்சர் அமித் ஷாவே சொல்லியிருக்கிறார்.
வலியுறுத்தல்
தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை அழிக்கும் முயற்சி இது. இதைத் தடுக்க ஒரே வழி, கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வருவது தான். அதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். பாடத்திட்டங்களை வகுப்பது மற்றும் கற்க வேண்டிய மொழிகளை முடிவு செய்வதில், மாநிலங்களின் விருப்பங்களுக்கு மாறாக, மத்திய அரசு திணிப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
மாநில பட்டியலுக்கு மாற்றாவிட்டால், கல்வி என்பது அனைவருக்கும் எட்டாக்கனியாகி விடும்.தடுப்புச்சுவரை எழுப்பி எழுப்பி, பலரை கல்விச் சாலைக்கு வெளியே நிறுத்தி விடுகின்றனர். இதை தமிழகம் வந்த போது, பிரதமரிடம் நேரடியாகவே வலியுறுத்தினேன். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றக்கோரும் நமது போராட்டம் தொடரும். அதற்கு மகேஷின் புத்தகம் துணை நிற்கும்.
மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சேர வேண்டிய நிதியை, தங்களது அரசியலுக்காக மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடரும். மாநில உரிமைகளை பெறும் வழக்குகளில் வென்றது போல, இந்த வழக்கிலும் வெல்வோம். இவ்வாறு அவர் பேசினார்.
அங்குசம் பரிசு
முதல்வர் ஸ்டாலினுக்கு, யானையை அடக்கும் அங்குசத்தை, அமைச்சர் மகேஷ் பரிசாக வழங்கினார். முதல்வர் ஸ்டாலினுக்கு, யானையை அடக்கும் அங்குசத்தை, அமைச்சர் மகேஷ் பரிசாக வழங்கினார்.