செஸ் விளையாட்டுக்கு சிறப்பு அகாடமி குகேஷ் பாராட்டு விழாவில் முதல்வர் அறிவிப்பு
செஸ் விளையாட்டுக்கு சிறப்பு அகாடமி குகேஷ் பாராட்டு விழாவில் முதல்வர் அறிவிப்பு
ADDED : டிச 18, 2024 12:42 AM
சென்னை:''தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வாயிலாக 'ஹோம் ஆப் செஸ்' என்ற சிறப்பு அகாடமி உருவாக்கப்படும்'' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு, சென்னையில் பாராட்டு விழா நடந்தது.
தமிழக அரசு அறிவித்த பரிசுத்தொகை 5 கோடி ரூபாய்க்கான காசோலையை குகேஷுக்கு வழங்கி, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
விளையாட்டு திறமையுடன் சிறந்த குணம், மன உறுதி இருந்ததால், இந்த வெற்றி கிடைத்துள்ளதாக குகேஷ் கூறியிருந்தார். அவற்றுடன், எப்போதும் புன்னகையுடன் இருக்கும் குணமும், விமர்சனங்களை தாங்கும் இயல்பும் இந்த வெற்றிக்கு காரணம்.
உலக சாம்பியன் ஆவதற்கு குகேஷ் எடுத்துக் கொண்டது, வெறும் 11 ஆண்டுகள்.
உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, இலக்கை நோக்கிய பயணம் ஆகியவற்றை, அவரிடம் இருந்து தமிழக இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு குகேஷ் பெற்ற வெற்றி லட்சக்கணக்கான குகேஷ்களை உருவாக்க வேண்டும்.
விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும், விளையாட்டுத் துறையை மேம்படுத்தவும் அரசு பல திட்டங்களை செயல்படுத்துகிறது. 56 செஸ் வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச மற்றும் தேசிய பதக்கம் வென்ற 3,345 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு, உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றோருக்கு, 7 லட்சம் ரூபாய் வழங்கினோம். பதக்கம் வென்றவர்களுக்கு 5 கோடி வழங்கினோம்.
செஸ் விளையாட்டை பொறுத்தவரை, தமிழகத்துக்கு பெரிய வரலாறு உள்ளது. நாட்டின் 85 கிராண்ட் மாஸ்டர்களில் 31 பேர், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். திறமையான செஸ் வீரர்களை உருவாக்க, 'ஹோம் ஆப் செஸ்' என்ற சிறப்பு அகாடமி உருவாக்கப்படும்.
கல்வியிலும் விளையாட்டிலும் தமிழக இளைஞர்கள் சாதிக்க வேண்டும். அதற்கு அரசு ஏற்படுத்தி தரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
உலக செஸ் போட்டியில் இடம்பெறும் செஸ் போர்டை, முதல்வருக்கு நினைவுப் பரிசாக குகேஷ் வழங்கினார். குகேஷுக்கு சால்வை அணிவித்து வாழ்த்தியபோது, கீழே அமர்ந்திருந்த அப்பா ரஜினி, அம்மா பத்மா ஆகியோரை மேடைக்கு அழைத்து வரச் சொன்னார்.
ஓமந்துாரார் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, கலைவாணர் அரங்கத்துக்கு, மேள தாளங்களுடன் ஊர்வலமாக குகேஷ் அழைத்து வரப்பட்டார்.
விளையாட்டு துறை செயலர் அதுல்யமிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி பங்கேற்றனர்.