ADDED : ஆக 21, 2025 01:33 AM

சென்னை:முதல்வரின் சகோதரர் தமிழரசு, 69, திடீர் உடல் நலக் குறைவு காரணமாக, சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலினின் தம்பி மு.க.தமிழரசு. இவர், சென்னை, டிரஸ்ட்புரத்தில் வசித்து வருகிறார். தமிழரசுக்கு நேற்று காலை திடீர் தலை சுற்றல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கல்லீரல் செயல்பாடு தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிகிறது. உணவு ஒவ்வாமை காரணமாக, பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரியவந்தது.
இதை தொடர்ந்து, அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்ததும், நேற்று பிற்பகல், முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று, தம்பி தமிழரசு உடல்நிலை குறித்து, மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
தி.மு.க., தலைவர்களும் நிர்வாகிகளும் மருத்துவமனை சென்று தமிழரசு உடல்நிலை விசாரித்தனர்.

