ADDED : ஜூலை 18, 2025 08:31 PM
சென்னை:நடப்பாண்டிற்கான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க, வீரர்கள் முன்பதிவை, துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார்.
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள், மாவட்ட மற்றும் மண்டல அளவில், ஆக., 22 முதல் செப்., 12 வரைநடைபெற உள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திலும், பள்ளி, கல்லுாரி மாணவ -- மாணவியர், மாற்றுத் திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் என, ஐந்து பிரிவுகளில் போட்டிகள் நடக்க உள்ளன.
மாவட்ட அளவில் 27 வகை போட்டிகள், மண்டல அளவில் ஏழு வகை போட்டிகள், மாநில அளவில் 37 வகை விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
இதற்காக, 83.3 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. போட்டிகளில் பங்கேற்க விரும்பும் விளையாட்டு வீரர்கள், https://cmtrophy.sdat.in மற்றும் https://sdat.tn.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக முன்பதிவு செய்யலாம்.
முன்பதிவுக்கு ஆகஸ்ட் 16ம் தேதி கடைசி நாள். தனிநபர் போட்டிகளில், மாநில அளவில் வெற்றி பெறுவோருக்கு, முதல் பரிசாக 1 லட்சம்; இரண்டாம் பரிசாக 75,000; மூன்றாம் பரிசாக 50,000 ரூபாய் வழங்கப்படும்.
குழு போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக, தலா 75,000; இரண்டாம் பரிசாக தலா 50,000; மூன்றாம் பரிசாக தலா 25,000 ரூபாய் வழங்கப்படும். விளையாட்டு வீரர்களுக்கான முன்பதிவை, துணை முதல்வர் உதயநிதி, தலைமை செயலகத்தில் நேற்று துவக்கி வைத்தார்.
அப்போது, விளையாட்டு துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.