கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் கடிதம்
கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் கடிதம்
ADDED : ஏப் 04, 2025 01:32 AM
சென்னை:'மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிரந்தரமாக பாதுகாக்க, கச்சத்தீவை மீட்க வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதிஉள்ளார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது:
இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்க, கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
கடந்த 1974ம் ஆண்டு, இந்தியா - இலங்கை இடையே போடப்பட்ட கச்சத் தீவு ஒப்பந்தம் தான், மீனவர்கள் பிரச்னைக்கு அடிப்படையாக உள்ளது.
முதல்வராக பதவி ஏற்று, 2021ல் பிரதமரை சந்தித்த போது, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தினேன். வெளியுறவு துறை அமைச்சரிடமும், அடுத்தடுத்த சந்திப்பில் வலியுறுத்தினேன்.
கடந்த 2024ல், 530 இந்திய மீனவர்கள், நடப்பாண்டில் முதல் மூன்று மாதங்களில் 147 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அவர்களுக்கு அதிகபட்ச சிறை தண்டனை, பெருந்தொகை அபராதமாக விதிக்கப்படுகிறது. பறிமுதல் செய்யப்படும் படகுகளும் ஏலம் விடப்படுகின்றன.
இலங்கை அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள், நம் மீனவர்களை வறுமையின் விளிம்புக்கு தள்ளியுள்ளன. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும். இதற்கு, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசுமுறை பயணமாக இலங்கை செல்லும் பிரதமர், இலங்கை அரசுடன் பேசி, அந்நாட்டு சிறையில் வாடும் மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் மீட்டுக் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் முதல்வர் கூறியுள்ளார்.

