வைக்கம் நுாற்றாண்டு நிறைவு விழா இரு மாநில முதல்வர்கள் இன்று பங்கேற்பு
வைக்கம் நுாற்றாண்டு நிறைவு விழா இரு மாநில முதல்வர்கள் இன்று பங்கேற்பு
ADDED : டிச 12, 2024 01:43 AM

சென்னை,:வைக்கம் போராட்டத்தில், ஈ.வெ.ரா., நுாற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் கேரளா சென்றுள்ளார்.
கேரள மாநிலம், வைக்கத்தில், தி.க., நிறுவனர் ஈ.வெ.ரா., போராட்டம் நடத்திய இடத்தில், 70 சென்ட் பரப்பளவில் நினைவகம் உள்ளது. முறையான பராமரிப்பின்றி கிடந்த இந்த நினைவகத்தை, 8.50 கோடி ரூபாய் செலவில், பொதுப்பணித் துறை வாயிலாக தமிழக அரசு புதுப்பித்துள்ளது.
அங்கு ஈ.வெ.ரா.,வின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்பட கண்காட்சிக்கூடம், நுாலகம், பார்வையாளர் மாடம், சிறுவர் பூங்கா உள்ளிட்டவை அமைக்கப்பட்டு உள்ளன.
வைக்கம் போராட்டத்தில், ஈ.வெ.ரா., நுாற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி, இந்த நினைவகம் மற்றும் நுாலகத்தை, முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கவுள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்கிறார்.
இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தும் பணிகளை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் முதல்வர் வழங்கியுள்ளார். இதற்காக, அவர் கேரளாவில் இரு நாட்களாக முகாமிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், சாமிநாதன் ஆகியோர் நேற்று, கொச்சி விமான நிலையம் சென்றனர். அவர்களை அமைச்சர் வேலு வரவேற்றார். முதல்வருக்கு புத்தகங்களை பரிசாக வழங்கி, கேரள மக்களும் வரவேற்பு அளித்தனர்.
குமரகத்தில் இன்று இரவு தங்கும் முதல்வர், நாளை காலை நடக்கும் நிகழ்ச்சியில், நினைவகத்தை திறந்து வைக்கிறார்.
இந்நிகழ்ச்சி குறித்து, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நுாற்றாண்டுகளுக்கு முன் நமது சமூகம் எப்படி இருந்தது; இப்போது நாம் எங்கு வந்தடைந்து இருக்கிறோம் என்று சற்று நினைத்து பாருங்கள்.
'இந்த மாற்றங்களுக்கு விதை துாவிய வைக்கம் போராட்டத்தின் நுாற்றாண்டு நிறைவு விழாவில், இன்று நான் பங்கேற்கிறேன்' என கூறியுள்ளார்.
கொச்சி விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினை வரவேற்ற தமிழக அமைச்சர் வேலு.

