மாநில அரசின் கட்டுப்பாட்டில் பல்கலை வரும் வரை சட்டப் போராட்டம் தொடரும் காரைக்குடியில் முதல்வர் பேச்சு
மாநில அரசின் கட்டுப்பாட்டில் பல்கலை வரும் வரை சட்டப் போராட்டம் தொடரும் காரைக்குடியில் முதல்வர் பேச்சு
ADDED : ஜன 22, 2025 02:02 AM

காரைக்குடி:பல்கலை நிர்வாகம் மாநில அரசின் முழு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். வேந்தர் பதவி முதல்வரிடம் இருக்க வேண்டும். மாணவர்களுக்கான திட்டங்களை பார்த்து பார்த்து உருவாக்கி, செலவு செய்வது மாநில அரசு. பேராசிரியர்கள் உட்பட அனைவருக்கும் சம்பளம் கொடுப்பது மாநில அரசு. பல்கலை., உட்பட உள்கட்டமைப்பு வசதி செய்து தருவது மாநில அரசு. ஆனால், வேந்தர் பதவி மட்டும் மத்திய அரசு நியமிக்க வேண்டுமா என காரைக்குடியில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
காரைக்குடி அழகப்பா பல்கலை.,யில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சொந்த நிதியில் அவரது தாய் பெயரில் ரூ. 12 கோடி மதிப்பீட்டில் லக்ஷ்மி வளர்தமிழ் நுாலகம் கட்டப்பட்டுள்ளது. நவீன குளிரூட்டப்பட்ட இந்நுாலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து பல்கலையில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து, கருத்தரங்க கூடத்திற்கு வீறுகவியரசர் முடியரசனார் அரங்கம் என்று பெயர் சூட்டினார்.
பின்னர் ஸ்டாலின் பேசியதாவது:
அழகப்பர் வாழ்ந்த மண்ணிற்கு வந்தது பெருமையாக உள்ளது. கல்வித் தொண்டையும் தமிழ் தொண்டையும் அவர் வளர்த்ததால் தான் இன்று பலர் பட்டம் பெற்று, உலகம் முழுவதும் பரவி உள்ளனர். திருக்குறளை பின்பற்றினால் தான் உலகமும் தமிழும் காப்பாற்றப்படும். வள்ளுவரை யாரும் கபளீகரம் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழ் மண்ணில் சமத்துவம் பேசிய வள்ளுவர், வள்ளலார் போன்றவர்களை களவாட ஒரு கூட்டமே செயல்படுகிறது. இதனை பாதுகாக்க ஒவ்வொரு தமிழனும் அரணாக இருக்க வேண்டும். வீறுகவியரசர் முடியரசனார் கன்னித்தமிழை வளர்த்தவர்.
கல்வி தான் சொத்து
சிதம்பரம் நடமாடும் நுாலகம். ஒவ்வொரு திட்டங்கள் அறிவிக்கும் போதும் ப. சிதம்பரம் என்ன கருத்து தெரிவிக்கிறார் என்பதை நான் ஆர்வமுடன் கவனிப்பேன். கொடை குணமும், அறிவுத் தாகமும் கொண்டவர்கள் ஒவ்வொருவரும் இதுபோன்று தங்களது ஊரில் நூலகத்தை உருவாக்க வேண்டும். எனக்கு சால்வை அணிவிப்பதை தவிர்த்து, நூல்கள் வழங்க தெரிவித்ததின் பேரில் இதுவரை 2 லட்சத்து 75 ஆயிரம் நூல்கள் வந்தது. அதை பல்வேறு நூலகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளேன். இந்த நூலகத்திற்கும் எனது சார்பில் ஆயிரம் புத்தகங்களை முதல் கட்டமாக அனுப்பி வைப்பேன்.
கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து. தி.மு.க., கல்விக்கு முன்னுரிமை அளித்தே திட்டங்கள் செயல்படுத்துகிறது. இந்தியாவிலேயே உயர் கல்வியில் முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது.
மாணவர்களுக்கு திட்டங்கள்
மூன்றரை ஆண்டுகளில் 32 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு முதல் நிலை தேர்வுக்கு மாதம் 7 ஆயிரத்து 500, மெயின் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு மாதம் ரூ. 25 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 22 லட்சத்து 56 ஆயிரம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளித்து பெருநிறுவனங்களில் பணிபுரிய தகுதி படுத்திக் கொண்டிருக்கிறோம். புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34 சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழ் புதல்வன் திட்டத்தால் மாணவர்களின் உயர் கல்வி ஆர்வம் அதிகரித்துள்ளது. முதல் தலைமுறையாக கல்லூரி வரும் மாணவர்களுக்கு கல்வி கட்டண சலுகையாக ரூ. ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ரூ. ஆயிரம் கோடியில் காமராஜர் கல்லூரி மேம்பாடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூ. 150 கோடி செலவில் உயர்கல்வி நிறுவனங்கள் டிஜிட்டல் முறையில் ஒருங்கிணைந்த கற்றல் மேலாண்மை மையமாக உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முதலிடம்
மாணவர்களுக்கான தொழில் திறன் மேம்பாட்டு திட்டம், முதலமைச்சரின் ஆராய்ச்சி மானிய திட்டம், முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டம், உங்களை தேடி கல்வித் திட்டம் மூலம் உயர் கல்வி தரமும், அடிப்படை கட்டமைப்பு வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே அதிக அளவிலான அரசு பல்கலை., உள்ள மாநிலமாக, 500க்கும் மேற்பட்ட தரமான இன்ஜி., கல்லூரி உள்ள மாநிலமாக, அதிக மருத்துவக் கல்லூரி உள்ள மாநிலமாக புகழ்பெற்ற 100 உயர்கல்வி நிறுவனங்களில் 31 உயர்கல்வி நிறுவனம் உள்ள மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. மாணவர் சேர்க்கையில் தேசிய சராசரியை விட 2 மடங்கு அதிகமாக 49 சதவீதம் பெற்று, இந்திய அளவில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.
இதற்காகத்தான் பல்கலை நிர்வாகம் மாநில அரசின் முழு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். வேந்தர் பதவி முதல்வரிடம் இருக்க வேண்டும். மாணவர்களுக்கான திட்டங்களை பார்த்து பார்த்து உருவாக்கி, செலவு செய்வது மாநில அரசு. பேராசிரியர்கள் உட்பட அனைவருக்கும் சம்பளம் கொடுப்பது மாநில அரசு. பல்கலை கட்டமைப்பு வசதி செய்து தருவது மாநில அரசு. ஆனால், வேந்தர் பதவி மட்டும் மத்திய அரசு நியமிக்க வேண்டுமா.
இதனால் தான் சட்ட போராட்டம் உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறோம். மாநிலத்தின் கல்வி உரிமை கிடைக்கும் வரை சட்டப் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சிதம்பரம் பேசியதாவது:
தமிழ் வாழ வேண்டும், வளர வேண்டும். தமிழ் வாழ வேண்டும் என்றால் 9 கோடி மக்களும் தமிழில் பேசி எழுத வேண்டும். தமிழ் வளர வேண்டும் என்றால் கணித தமிழ், கணினி தமிழ், அறிவியல் தமிழ், சட்ட தமிழ், மருத்துவ தமிழ், டிஜிட்டல் தமிழ், ரோபோடிக்ஸ் தமிழாக புதிய வடிவத்தை தமிழ் மொழி எடுக்க வேண்டும். இந்நுாலகம் உலகம் போற்றும் ஆராய்ச்சி மையமாக மாற வேண்டும்.
சிவகங்கை பூமி தமிழ் வளர்த்த பூமி. அழகப்பர் எங்களுக்கு கிடைத்த வரம். இந்த நுாலகத்தை பல வகையில் மேம்படுத்த வேண்டும்.
புத்தகங்கள் வாங்குவதற்கும் சேகரிப்பதற்கும் தமிழன்பர்கள் உதவ வேண்டும். இந்த நுாலகத்தின் கொள்ளளவு மிக அதிகம். நுாலகத்தின் யானை பசிக்கு தமிழ் அன்பர்கள் அனைவரும் கைப்பிடிச் சோறு தர வேண்டும். தமிழக அரசு ஒரு பெரிய படிச்சோறு தர வேண்டும். இவ்வாறு பேசினார்.
துணைவேந்தர் க. ரவி வரவேற்றார். கருணாநிதி நுாற்றாண்டு விழா தேசிய கருத்தரங்கு ஆய்வு கட்டுரைகள் தொகுப்பு நுால், கவிஞர் அண்ணாதாசன் எழுதிய 'தமிழக முதல்வர் ஸ்டாலின் பிள்ளைத்தமிழ்' ஆகிய நுால்கள் வெளியிடப்பட்டன.
அமைச்சர்கள் பெரியகருப்பன், கோவி. செழியன், தங்கம் தென்னரசு, ரகுபதி, சாமிநாதன், கண்ணப்பன், மெய்யநாதன், கார்த்தி எம்.பி., மாங்குடி எம்.எல்.ஏ., கலெக்டர் ஆஷா அஜித், குன்றக்குடி பொன்னம்பல அடிகள், பதிவாளர் செந்தில் ராஜன், மேயர் முத்துத்துரை, கோட்டையூர் பேரூராட்சி தலைவர் கார்த்திக் சோலை உட்பட பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் ராசாராம் நன்றி கூறினார்.