சிறுமி வன்கொடுமை புகார் 13 நாட்களுக்கு பின் கொடூரன் கைது
சிறுமி வன்கொடுமை புகார் 13 நாட்களுக்கு பின் கொடூரன் கைது
ADDED : ஜூலை 26, 2025 01:02 AM
கும்மிடிப்பூண்டி:பத்து வயது சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்த நபரை, சூலுார்பேட்டை ரயில் நிலையத்தில் தனிப்படை போலீசார் பிடித்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில், கடந்த 12ம் தேதி பள்ளி சென்று, புத்தகப்பையுடன், பாட்டி வீட்டிற்கு சென்ற, 10 வயது சிறுமியை, மர்ம நபர் மாந்தோப்புக்குள் துாக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து தப்பினார்.
இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில், வழக்கு பதிவு செய்தனர். மர்ம நபரை, வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கர்க் தலைமையில், 20 தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
மர்ம நபரின், படம் மற்றும் சிசிடிவி பதிவு காட்சிகளை வெளியிட்டு, தகவல் தருவோருக்கு, 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்றும், காவல் துறை அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், தனிப்படை போலீசார், நேற்று மாலை, ஆந்திர மாநிலம் சூலுார்பேட்டை ரயில் நிலையம் பகுதியில், மர்ம நபரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கிருந்த நபர் ஒருவர், மர்ம நபரின் உருவ ஒற்றுமையுடன் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை பிடித்து விசாரித்தனர். அவரை மொபைல் போனில் படம் பிடித்து, கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி.,க்கு அனுப்பி வைத்தனர்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியிடம், அந்த நபரின் படத்தை காண்பித்தனர். அப்போது, ஒரு நிமிடம் சிறுமி திடுக்கிட்டார். பின், 'என்னை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் இவன் தான்' என்று, தெரிவித்தா ர்.
இதையடுத்து, மர்ம நபரை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர் விசாரணையில், அந்த நபர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், சூலுார்பேட்டை பகுதியில், தாபா உணவகத்தில் வேலை செய்து வருவதும் தெரி ய வந்துள்ளது.
நேற்று மாலை சென்னையில் இருந்து, ஆந்திர மாநிலம் நெல்லுாரை நோக்கிச் சென்ற மின்சார ரயிலில் பயணித்து, சூலுார்பேட் டையில் இறங்கி உள்ளார். உணவகத்தில் இரவு நேரத்தில் வேலை பார்த்துக் கொண்டு, பகலில் கஞ்சா போதையில் பல இடங்களில் சுற்றித்திரிவதை வாடிக்கையாக வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது.
கொடூரன் சிக்கினான் என்ற தகவல் வெளியானதும், ஆரம்பாக்கம் போலீஸ் நிலையம் முன், 300க்கு ம் மேற்பட்டோர் குவிந்தனர். குற்றவாளியை காண்பிக்க வேண்டும் என்று போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததுடன், சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையை மறித்து, போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். போலீசார் அவர்களை அப்புறப் படுத்தினர்.
இது குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கர்க் அளித்த பேட்டி:
கைது செய்யப்பட்ட நபர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என, தெரிவித்துள்ளார். அதுபற்றி விசாரித்து வருகிறோம்.
பிடிபட்ட நபரின் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அதை ஆய்வுக்கு அனுப்பி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.