தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் 56% அதிகரிப்பு: சட்டத்தை கடுமையாக அமல்படுத்தாததால் அவலம்
தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் 56% அதிகரிப்பு: சட்டத்தை கடுமையாக அமல்படுத்தாததால் அவலம்
ADDED : ஜூன் 09, 2025 01:16 AM

அனைத்து சமூக அளவீடுகளிலும் முன்னணி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது என, மாநில அரசு கூறி வரும் நிலையில், 2023 முதல் தற்போது வரை குழந்தை திருமணங்கள், 56 சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
பள்ளி செல்லும் சிறுமியர் கர்ப்பமாகி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் போது தான், சட்டப்பூர்வ வயதுக்கு முன்னரே திருமணம் நடந்துள்ளது தெரியவருகிறது. இதன்பின், 'போக்சோ' வழக்கும், குழந்தை திருமண தடை சட்ட வழக்கும் பதிவு செய்யப்படுகின்றன.
மரணத்திற்கு காரணம்
குழந்தை திருமண தடை சட்டப்படி, 18 வயது நிரம்பாத பெண்ணுக்கும், 21 வயது நிரம்பாத ஆணுக்கும் நடக்கும் திருமணம், குழந்தை திருமணமாக கருதப்படுகிறது. இந்த திருமணங்கள் செல்லத்தக்கது அல்ல.
இந்த வகை திருமணங்கள், சிறுமியருக்கு உடல் மற்றும் மன ரீதியான அச்சுறுத்தலாக அமைகின்றன. முக்கியமாக, இளம் வயது கர்ப்பத்தால், சிறுமிக்கும், வயிற்றில் வளரும் கருவுக்கும் சிக்கல்கள் அதிகரிக்கும்;- இது, இளம் பருவப் பெண்களின் மரணத்திற்கு முக்கிய காரணமாகவும் அமைகிறது.
தமிழகத்தில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், திருவண்ணாமலை மாவட்டங்களின் மலை கிராமங்களில் வசிக்கும் மக்கள், போதிய படிப்பறிவு இல்லாமல், கூலி வேலை செய்பவர்கள்.
அதிலும், குடும்பமாக வெளி மாவட்டம், வெளி மாநிலங்களுக்கு கூலி வேலைக்கு செல்பவர்கள். அப்படி செல்லும் இடங்களில், தங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது என, சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கின்றனர்.
பள்ளி செல்லும் மாணவியரை காதலிப்பதாக கூறி, பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் இளைஞர்களாலும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி பெற்றோர் கவலை அடைகின்றனர். விளைவு, பெற்றோரே குழந்தை திருமணத்தை நடத்துகின்றனர்.
பாலியல் வன்முறை
இதில், அவர்களின் பொருளாதார நிலைக்கும் பிரதான பங்கு உண்டு. முறை தவறிய உறவால் உருவாகும் கர்ப்பம், பாலியல் வன்முறையில் இருந்து, திருமணம் ஒன்றே தன் மகள்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் என, பல ஏழை பெற்றோர் நம்புகின்றனர்.
தர்மபுரியில், 2023ல், 16 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமி, தன் கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு குறித்து புகார் தெரிவிக்க, போலீஸ் ஸ்டேஷன் சென்றார்.
சிறுமியின் கணவர் வீட்டார் மீது வழக்கு பதிந்த எஸ்.எஸ்.ஐ., ஒருவர், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பழகி, தனியாக ஒரு வீட்டில் வைத்து, அவரை பயன்படுத்திஉள்ளார்.
சேலம் மாவட்ட சமூக நல அலுவலர் கார்த்திகா கூறுகையில், ''குழந்தை திருமணங்களை தடுக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது, மக்களுக்கு தெரியவந்தால், 181 மற்றும் 1098 என்ற எண்களில் தகவல் தெரிவிக்கலாம்.
''குழந்தை திருமணம் நடப்பது கண்டறியப்பட்டால், அதை நடத்துபவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். புகார் அளிப்பவரின் தகவல், ரகசியம் காக்கப்படும்,'' என்றார்.
குறிப்பிட்ட சில மாவட்டங்களை தவிர, மற்ற மாவட்டங்களில், இது தொடர்பான முழுமையான விபரங்கள் எதுவும் கைவசம் இல்லை என, அரசு தரப்பில் தெரிவிக்கின்றனர். அதனால், சில மாவட்டங்களுக்கான குழந்தை திருமண விபரங்கள் இங்கே இடம்பெறவில்லை.
- நமது நிருபர் குழு -