குழந்தை பருவ புற்றுநோய் பாதிப்பு கண்டறியும் பணி தமிழகத்தில் துவக்கம்
குழந்தை பருவ புற்றுநோய் பாதிப்பு கண்டறியும் பணி தமிழகத்தில் துவக்கம்
ADDED : ஜன 31, 2025 10:47 PM
சென்னை:தமிழகத்தில் குழந்தை பருவ புற்றுநோய் பாதிப்புகளை கண்டறியும் பணி நடந்து வருவதாக, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இணைந்து நடத்தும் குழந்தைகளுக்கான சிறப்பு புற்றுநோய் பதிவகத்தை, அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
அதில் சென்னை மாவட்டத்தில், 2022ம் ஆண்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, 241 குழந்தைகளின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 2023, 2024ம் ஆண்டுகளில் கண்டறியப்பட்ட புற்றுநோய் பாதிப்பு குறித்து, ஓரிரு ஆண்டுகளில் பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவகத்தை துவக்கி வைத்த பின், அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழக அரசுடன், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, இந்திய குழந்தைகள் ரத்தவியல் மற்றும் புற்றுநோயியல் குழு, இந்திய குழந்தைகள் புற்றுநோயியல் மையம் ஆகியவை ஒருங்கிணைந்து, புற்றுநோய் பதிவேடு தரவுகளை கணக்கிட்டு வருகிறது.
சென்னை மக்கள் தொகை அடிப்படையிலான, குழந்தை பருவ புற்றுநோய் பதிவேடு தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் எவ்வளவு குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது கண்டறியப்பட உள்ளது.
இதன் வாயிலாக, அவர்களுக்கு துவக்க நிலை சிகிச்சைகள் வழங்கப்படும். இந்தியாவிலேயே குழந்தைப்பருவ புற்றுநோய் கண்டறியும் பணி, தமிழகத்தில் பிரத்யேகமாக நடந்து வருகிறது.
புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் வகையில், ஈரோடு, திருப்பத்துார், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், புற்றுநோய் பரிசோதனை நடந்து வருகிறது.
தொடர்ந்து, 27 கோடி ரூபாய் மதிப்பில், அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் பரிசோதனை துவங்க உள்ளது. அரசு சிறப்பு டாக்டர்களை பொறுத்தவரையில், 658 காலிப்பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்புவதற்கு அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல, 2,553 டாக்டர்கள் தேர்வு நடந்து வருகிறது. இம்மாதம் இரண்டாவது வாரத்தில், பணி ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.