நெருப்போடு விளையாடு; கோவையில் சிறுவர்களின் தீப்பந்த சிலம்பாட்ட சாதனை முயற்சி
நெருப்போடு விளையாடு; கோவையில் சிறுவர்களின் தீப்பந்த சிலம்பாட்ட சாதனை முயற்சி
ADDED : டிச 15, 2024 08:54 PM

கோவை: கோவையில் சிறுவர்கள் 350 பேர் பங்கேற்ற தீப்பந்த சிலம்பாட்ட சாதனைப் போட்டி நிகழ்ச்சி இன்று நடந்தது.
கோவை சித்ரா அருகில் உள்ள பிராட்வேயில் டெக்கத்லான், வீரவர்மன் வீர சிலம்பாட்ட பயிற்சி பள்ளி, பிராட்வே இணைந்து நோபல் உலக சாதனை முயற்சி போட்டியை நடத்தியது. இதில் ஒற்றை கம்பில் இரட்டை தீப்பந்தங்கள் கொண்ட சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி முதலில் நடந்தது. நான்கு முதல் 8 வயதுக்கு உட்பட்ட 150 குழந்தைகள் 10 நிமிடங்கள் இரட்டை பந்த சிலம்ப பந்தங்களை சுழற்றினர்.
நட்சத்திர வடிவில் குழந்தைகள் வரிசைப்படுத்தப்பட்டு இருந்தனர். அடுத்ததாக நடந்த 8 முனைகள் கொண்ட நட்சத்திர வடிவ தீப்பந்தங்களை 5 நிமிடங்கள் சுழற்றினர். பத்து வயதுக்கு மேற்பட்ட 200 குழந்தைகள் இதில் பங்கேற்றனர்.
வீர வர்மன் சிலம்பு பயிற்சி பள்ளி பயிற்சியாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், 'தமிழர்களின் கலையான சிலம்பாட்டம் அழிந்து வரும் நிலையில் உள்ளது. ஆபத்தான காலங்களில் தற்காத்துக் கொள்ளும் கலையை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் சிறு வயது முதலே குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறேன்.
நெருப்பையும் பாதுகாப்பாக கையாள முடியும் என்பதை முன்னிலை படுத்தவும், உலக அளவில் இந்த கலையை கொண்டு செல்லவும் இந்த நிகழ்வை நடத்தியுள்ளோம். சிலம்ப கலையை பாதுகாத்து மறுமலர்ச்சி பெற அரசு உதவ வேண்டும்,' என்றார்.