ADDED : மே 06, 2025 09:59 PM
சென்னை:அபுதாபியில் இருந்து, 'இண்டிகோ' விமானம், கடந்த ஏப்., 30ம் தேதி சென்னை வந்தது. அதில் வந்த பயணியர் அனைவரும் உடைமைகளை எடுத்து வெளியே சென்றனர். ஆனால், ஒரு, 'லக்கேஜ்' மட்டும், 'கன்வேயர் பெல்ட்டில்' அப்படியே கிடந்தது.
இதை பார்த்த சுங்கத்துறை அதிகாரிகள், யாராவது தவற விட்டு இருக்கலாம் என்று சந்தேகித்தனர். யாராவது வந்து எடுத்துச் செல்வர் என்றும் எதிர்பார்த்தனர். ஆனால், எந்த பயணியும் வரவில்லை.
இதையடுத்து, அதில் என்ன இருக்கிறது என பரிசோதித்த போது, சீனா நாட்டில் உள்ள டி.ஜே.ஐ., நிறுவனத்தின், 10 'லேட்டஸ்ட் மாடல் ட்ரோன்'கள் இருந்தன. இது, இந்தியாவில் தடை செய்யப்பட்டது; எடுத்து வருவதற்கு யாருக்கும் அனுமதி கிடையாது.
இதையடுத்து, லக்கேஜ்ஜில் இருந்து, 10 ட்ரோன்களை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், ஒரே நேரத்தில் இவ்வளவு ட்ரோன்கள் எதற்காக கொண்டு வரப்பட்டன; ஏதேனும் சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்தவா என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.
