சஸ்பெண்ட் ஏ.டி.ஜி.பி., - எம்.எல்.ஏ., மீது சி.ஐ.டி.,போலீசார் வழக்குப்பதிவு
சஸ்பெண்ட் ஏ.டி.ஜி.பி., - எம்.எல்.ஏ., மீது சி.ஐ.டி.,போலீசார் வழக்குப்பதிவு
ADDED : ஜூன் 27, 2025 12:29 AM
சென்னை:காதல் ஜோடியை பிரிக்கும் விவகாரத்தில், 17 வயது சிறுவன் கடத்தப்பட்டது தொடர்பாக, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட கூடுதல் டி.ஜி.பி., ஜெயராம், புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் மீது, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலாங்காடு அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் தனுஷ், 23. இவர், தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜயஸ்ரீ, 21, என்பவரை காதலித்தார்.
இருவரும் சென்னையில், ஏப்., 15ல் பதிவு திருமணம் செய்தனர். இவர்களை பிரிக்க, பெண்ணின் தந்தை வனராஜ், அவரது நட்பு வட்டத்தில் இருந்த காவல் துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட, முன்னாள் காவலர் மகேஸ்வரி ஆகியோர் முயற்சி செய்தனர்.
இவர்கள், சென்னையில் ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி.,யாக பணிபுரிந்து வந்த ஜெயராம், புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ஜெகன்மூர்த்தி ஆகியோரின் உதவியை நாடினார்.
அவர்களின் ஆலோசனையின்படி, மகேஸ்வரி, சென்னை பூந்தமல்லி அடுத்த துத்தம்பாக்கத்தை சேர்ந்தவரும், புரட்சி பாரதம் கட்சி நிர்வாகியுமான சரத்குமார், வனராஜ், அவரது உறவினர்கள் மணிகண்டன், கணேசன் ஆகியோர், இம்மாதம் 6ம் தேதி இரவு, தனுஷ் வீட்டிற்கு சென்றனர்.
அங்கிருந்த, அவரது தம்பியான, 17 வயது சிறுவனை காரில் கடத்தி உள்ளனர்.
இது தொடர்பாக, திருவாலாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வனராஜ், மகேஸ்வரி உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி, ஜெயராம், ஜெகன்மூர்த்தி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
அதன் தொடர்ச்சியாக, ஜெயராம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற ஆலோசனையின்படி, வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. சிறுவன் கடத்தப்பட்டது தொடர்பாக, காஞ்சிபுரம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதில், மகேஸ்வரி மற்றும் சரத்குமார் அளித்த வாக்குமூலத்தில், 'சிறுவன் கடத்தல் விவகாரத்தில் ஜெயராம், ஜெகன்மூர்த்தி ஆகியோருக்கு தொடர்பு உள்ளது' என கூறியிருப்பதால், சி.பி.சி.ஐ.டி., போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில், ஜெயராம், ஜெகன்மூர்த்தி ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
இருவருக்கும், சி.பி.சி.ஐ.டி., போலீசார் 'சம்மன்' அனுப்பி, மீண்டும் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.