சி.ஐ.எப்., குளோபல் இந்தியன் விருது: ஈஷா நிறுவனர் சத்குருவுக்கு அறிவிப்பு
சி.ஐ.எப்., குளோபல் இந்தியன் விருது: ஈஷா நிறுவனர் சத்குருவுக்கு அறிவிப்பு
ADDED : அக் 22, 2024 04:13 AM
கோவை: கனடா - இந்தியா அறக்கட்டளை சார்பில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவிற்கு, சி.ஐ.எப்., குளோபல் இந்தியன் விருது வழங்கப்பட உள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
கனடா - இந்தியா அறக்கட்டளை என்பது கனடாவிற்கும், இந்தியாவிற்கும் இடையே வலுவான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு லாப நோக்கமற்ற அமைப்பாகும்.
இந்த அமைப்பு சார்பில், உலக அளவில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தனிநபர்களை கொண்டாடும் விதமாக, சி.ஐ.எப்., குளோபல் இந்தியன் விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், உலகளவில் சுற்றுச்சூழல் சவால்களை சமாளிப்பதற்காக, சத்குரு தலைமையேற்று செய்து வரும் பணிகளை பாராட்டியும், விழிப்புணர்வான உலகத்தை உருவாக்குவதிலும், மனிதர்களின் விழிப்புணர்வை மேம்படுத்துவதிலும் ஈடுபட்டு வரும், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவிற்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
கனடா - இந்தியா அறக்கட்டளையின் தலைவர் ரித்தேஷ் மாலிக் கூறுகையில், சத்குரு, மனிதர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கான நடைமுறை தீர்வுகளையும், மண் சிதைவு, காலநிலை மாற்றம் மற்றும் உணவின் தரம் போன்ற உலகளாவிய சவால்களுக்கு, நீண்ட கால தீர்வுகளையும் வழங்குகிறார்.
சத்குரு போன்ற நற்சிந்தனை தலைவர்களிடமிருந்து, கனடா பெரிதும் பயனடையும். சத்குருவின் போதனைகள், கனடா முன்னிறுத்தும் தனிநபர்களின் நல்வாழ்வு, நிலைத்தன்மை மற்றும் அனைவரையும் அரவணைத்துக்கொள்ளுதல் ஆகியவைகளோடு ஒன்றி போகின்றன.
சத்குரு, யோகா, தியானம் மற்றும் தெளிவான மனநிலை போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கிறார். இது குறிப்பாக, மனநோய் பிரச்னைகளின் சவால்களை எதிர்கொள்ளும், கனடாவின் சுகாதார அமைப்பின் முன்னுரிமைகளுடன் ஒத்துப்போகிறது, என்றார்.
இவ்வாறு, செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சத்குரு, கனடா -- இந்தியா அறக்கட்டளைக்கு நன்றி தெரிவித்ததுடன், இந்த விருதுடன் வழங்கப்படும் தொகையினை, காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.