அரசு பஸ் ஊழியர்கள் சிறை நிரப்பும் போராட்டம் சி.ஐ.டி.யு., அறிவிப்பு
அரசு பஸ் ஊழியர்கள் சிறை நிரப்பும் போராட்டம் சி.ஐ.டி.யு., அறிவிப்பு
ADDED : ஜன 18, 2025 07:50 PM

சென்னை:போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, வரும், 22ல் சிறை நிரப்பும் போராட்டம் நடத்த உள்ளதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
சி.ஐ.டி.யு., பொதுச்செயலர் ஆறுமுக நயினார் அளித்த பேட்டி:
போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை அரசு ஈடுசெய்வதில்லை. இதனால். கடும் நிதி நெருக்கடியில் உள்ளன. தினமும் ஒரு கோடி கி.மீ., இயக்கப்பட்ட அரசு பஸ்கள், தற்போது, 80 லட்சம் கி.மீ., மட்டுமே இயக்கப்படுகின்றன.
கடந்த 2017ல், 22,000 பஸ்கள் இயக்கப்பட்டன. தற்போது, 18,200 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. ஏராளமான வழித்தடங்களில் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு அளிக்க வேண்டிய வேலையை மறுப்பது, பஸ்கள் எண்ணிக்கையைக் குறைப்பது என, அ.தி.மு.க., ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட எட்டு அரசாணைகளை, தி.மு.க., அரசு செயல்படுத்தி வருகிறது.
போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால், போக்குவரத்து கழகங்களை மேம்படுத்த முடியாத நிலை உள்ளது. அதனால், போக்குவரத்துக் கழகங்கள் சீராக செயல்பட ஏதுவாக அரசு தரப்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்; ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் நாளன்றே ஓய்வு கால பலன்கள் வழங்க வேண்டும்; புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 22ம் தேதி, மாநிலம் முழுதும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்த உள்ளோம்.
சென்னையில் பிராட்வே பஸ் நிலையம் அருகில், போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.