சாம்சங் துணை கம்பெனி பக்கம் திரும்பிய சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் வேலைநிறுத்த போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டம்
சாம்சங் துணை கம்பெனி பக்கம் திரும்பிய சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் வேலைநிறுத்த போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டம்
ADDED : அக் 18, 2024 12:53 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் அமைப்பது, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி, 37 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.
அரசுக்கு கடும் நெருக்கடியை அளித்து வந்த இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, பல கட்ட பேச்சு நடந்தது. இருப்பினும், போராட்டத்தை கைவிடாமல், தொடர்ந்து சி.ஐ.டி.யு., தொழிற்சங்க நிர்வாகிகள் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையிலான பேச்சுக்கு பின், வேலைநிறுத்தப் போராட்டத்தை, சி.ஐ.டி.யு., 15ம் தேதி முடித்துக் கொண்டது.
சாம்சங் தொழிலாளர்கள் வழக்கம்போல நேற்று பணிக்கு திரும்பினர்.
சாம்சங் போராட்டம் துவங்கும் முன், காஞ்சிபுரம் அருகே நீர்வள்ளூர் கிராமத்தில் இயங்கும் எஸ்.எச்.இந்தியா தொழிற்சாலையில், சி.ஐ.டி.யு., வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகிறது.
சாம்சங் தொழிற்சாலைக்கு உதிரிபாகங்கள் தயாரித்து தரும் இந்த தொழிற்சாலை, 15 ஆண்டுகளுக்கு முன் இக்கிராமத்தில் துவங்கப்பட்டது.
இங்கு, நிரந்தர தொழிலாளர்கள் 94 பேரும், பயிற்சி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என 400 பேரும் பணியாற்றி வந்தனர்.
நான்கு மாதங்களுக்கு முன், தொழிற்சாலையில் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தை அமைக்க வேண்டும் என, 12 நிரந்தர தொழிலாளர்கள் முடிவு செய்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்த விவகாரம், தொழிற்சாலை நிர்வாகத்திற்கு தெரியவந்துள்ளது. இதனால், 12 பேரையும் தொழிற்சாலை நிர்வாகம் 'சஸ்பெண்ட்' செய்தது. இதனால், அதிருப்தியடைந்த நிரந்தர தொழிலாளர்கள் 90 பேர், தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கினர். நேற்றுடன் 121வது நாளாக போராட்டம் தொடர்கிறது.
சி.ஐ.டி.யு., மாவட்டச் செயலர் முத்துகுமார், நீர்வள்ளூரில் நடக்கும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் நேற்று பங்கேற்றார். அவர்களுடன் பேசி, போராட்டத்தை தீவிரப்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.
தொடர் போராட்டம் நடத்தும் 90 தொழிலாளர்களையும், தொழிற்சாலை நிர்வாகம் சில நாட்களுக்கு முன் சஸ்பெண்ட் செய்துள்ளது. ஒப்பந்த தொழிலாளர்கள், பயிற்சிக்கு வந்த தொழிலாளர்கள் ஆகியோரது துணையுடன், தொழிற்சாலை நிர்வாகம் உற்பத்தியை தொடர்கிறது.
சஸ்பெண்ட் செய்த தொழிலாளர்களை பணிக்கு சேர்ப்பது மற்றும் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தை அங்கீகரிப்பது ஆகிய கோரிக்கைகளை முன்னிறுத்தி, மேலும் போராட்டத்தை தீவிரப்படுத்த சி.ஐ.டி.யு., முடிவு செய்துள்ளது.
அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்திய சாம்சங் தொழிற்சாலை வேலைநிறுத்தப் போராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்த நிலையில், அடுத்ததாக எஸ்.எச்., இந்தியா தொழிற்சாலை போராட்டத்தை தீவிரபடுத்த சி.ஐ.டி.யு., முடிவு செய்துள்ளது.