அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர் முன்னிலையில் மோதல்; மா.செ.,க்கு கொலை மிரட்டல்: எஸ்.பி.,யிடம் புகார்
அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர் முன்னிலையில் மோதல்; மா.செ.,க்கு கொலை மிரட்டல்: எஸ்.பி.,யிடம் புகார்
ADDED : மார் 19, 2025 04:07 AM

தஞ்சாவூர் தெற்கு அ.தி.மு.க., மாவட்ட செயலர் சி.வி.சேகருக்கும், அமைப்புச் செயலர் துரை செந்திலுக்கும் இடையிலான கோஷ்டி பூசல், முன்னாள் அமைச்சர் வளர்மதி முன்னிலையில் மோதலாக வெடித்தது.
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க.,வில், மாவட்டச் செயலர் சி.வி.சேகர், அமைப்புச் செயலர் துரை செந்தில் ஆதரவாளர்கள் எதிரும் புதிருமாக செயல்பட்டு வருகின்றனர். அ.தி.மு.க.,வின் தஞ்சை தெற்கு மாவட்டத்துக்குள் பட்டுக்கோட்டை, பேராவூரணி சட்டசபை தொகுதிகள் உள்ளளன.
பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் போட்டியிட சி.வி.சேகர் விரும்புகிறார்; துரை செந்திலும் போட்டிக்கு வருகிறார். இந்த பிரச்னையில், சேகருக்கு நெருக்கடி தரும் வகையில், அவரது ஆதரவாளர்களாக இருக்கும் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளை விமர்சித்து, சமூக வலைதளங்களில் துரை செந்தில் ஆதரவாளர்கள் தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், பட்டுக்கோட்டை சட்டசபை தொகுதியில் அடங்கிய மதுக்கூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆய்வு கூட்டம், விக்கிரமம் கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்தது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வளர்மதி, அதில் மேலிட பொறுப்பாளராக பங்கேற்றார்.
அக்கூட்டத்தில் துரை செந்திலுக்கும், சி.வி.சேகரின் ஆதரவாளரும் மதுக்கூர் மேற்கு ஒன்றிய செயலருமான தண்டபாணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்க முயற்சித்தனர். வளர்மதியும், சி.வி.சேகரும் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். துரை செந்திலின் ஆதரவாளராக இருக்கும் கவிமுருகன் என்பவர், தண்டபாணி குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து, 'எனக்கும் என் குடும்பத்தினருக்கும், மாவட்டச் செயலருக்கும் கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளதால், உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது' என, தஞ்சாவூர் எஸ்.பி.,யிடம் தண்டபாணி புகார் அளித்துள்ளார். இத்தகவல், மேலிடத்திற்கு தெரியவந்தது. இதையடுத்து, இரு தரப்பினரிடமும் சமரச பேச்சு நடத்தி பிரச்னையை சுமுக மாக முடிக்க முயற்சித்து வருகின்றனர்.
- நமது நிருபர் -