'டிவி' விவாத நிகழ்ச்சியில் மோதல்: பா.ஜ.,வினர் மீது மட்டும் வழக்கு
'டிவி' விவாத நிகழ்ச்சியில் மோதல்: பா.ஜ.,வினர் மீது மட்டும் வழக்கு
ADDED : ஜன 13, 2026 05:23 AM

சென்னை: தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நடந்த மோதல் தொடர்பாக, பா.ஜ., மாநில இளைஞர் அணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா உட்பட, ஐந்து பேர் மீது, சென்னை, வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
சென்னை எழும்பூரில், தனியார் 'டிவி' அலுவலகத்தின் படப்பிடிப்பு அரங்கில், கடந்த 9ம் தேதி அரசியல் சார்ந்த விவாத நிகழ்ச்சி நடந்தது. இதில், பா.ஜ., சார்பில், அக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா, தி.மு.க., சார்பில், எம்.பி.தங்கத்தமிழ்செல்வன், தி.மு.க., ஆதரவாளர் செந்தில்வேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
நிகழ்ச்சியில் ஏற்பட்ட கருத்து மோதலை தொடர்ந்து, நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த, பா.ஜ., இளைஞரணி மாநிலத் தலைவர் எஸ் ஜி.சூர்யா மற்றும் பா.ஜ.,வினர் மீது, வெளியே காத்திருந்த நபர்கள், தாக்குதல் நடத்தினர். காயமடைந்த எஸ்.ஜி., சூர்யா, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக, எஸ்.ஜி.சூர்யா, பாரதி கண்ணன், விக்னேஷ், பத்மநாபன், லால் பிரசாத் உள்ளிட்ட பா.ஜ.,வினர் மீது, கடந்த 10ம் தேதி வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இவர்களில், திருவள்ளூரைச் சேர்ந்த லால் பிரசாத், 27, கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். எஸ்.ஜி.,சூர்யா உள்ளிட்ட நான்கு பேர், முன் ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
இந்த மனு, நீதிபதி கே.ராஜசேகர் முன், அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ் ஆஜராகி, ''மனுதாரர்களை பழிவாங்கும் வகையில், நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத, ஒரு பெண்ணிடம் இருந்து புகார் பெற்று, அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறி, பொய்யான வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது,'' என்றார்.
அப்போது போலீசார் தரப்பில், மனுவுக்கு பதில் அளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, 'விசாரணையை பொங்கல் விடுமுறைக்கு பின் தள்ளி வைத்ததோடு, அதுவரை எஸ்.ஜி. சூர்யா உட்பட நான்கு பேரையும், போலீசார் கைது செய்யக் கூடாது' என, உத்தரவிட்டார். பா.ஜ.,வினரை தாக்கியவர்கள் மீது, எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

